பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 சேர மன்னர் வரலாறு



பகைவரது படையகத்துட் புகுந்து எண்ணிறந்த மறவர்கயுைம் களிறுகளையும் குதிரைகளையும் கொன்று குவித்தனர். தேர்கள் சிதறுண்டு காற்றிற் பறந்தன. பகைவர் படைத்திரள், எதிர்க்கும் வலியின்றி ஈடழியக் கண்டதும், நெடிது பெய்யாதிருந்து, பின்பு மழை நன்கு பெய்தவிடத்துப் புள்ளினம் ஆரவாரிப்பது போல, இரும்பொறையது பாசறையில் மறவர் பேராரவாரம் செய்தனர்[1]. பழையன் மாறன், இந் நிலையில் தான் உயிர் உய்வது அரிது என அஞ்சி, மேலும் தானை கொணர்வ தாகச் சோழர்கட்குச் சொல்லிவிட்டு ஓடிவிட்டான். சோழர்களும் தாம் இருந்த எயிலின் கண் இருந்து மானத்தோடு போர் செய்யக் கருதித் தோற்றோடிய பழையன் வரவை எதிர்நோக்கியிருந்தனர்.

பாசறையில் இருந்த களிறுகள் போர்க்கருத்தோடு இங்குமங்கும் உலாவின; குதிரைகள் வீரரைச் சுமந்து கொண்டு பகைவர் வரவு நோக்கித் திரிந்து கொண்டிருந்தன. தேர்கள் தம் வீரர் குறிப்பின்படி இயங்கின. இரவுப் போதினும், தோளில் தொடி விளங்கப் போரில் மடிந்து புகழ் நிறுவும் வேட்கை கொண்டு அரிய வஞ்சினம் கூறிக் காவல் புரிந்தனர் காவல் மறவர்[2].

இவ் வகையில் நாள்கள் சில சென்றன. இரவிலும் பகலிலும் ஒற்றர் கூறுவனவற்றை எண்ணிப் பகைவர் களை வேரோடு தொலைக்கவும் அவரது நாட்டை அழிக்கவும் வேண்டிய குறிப்பிலேயே இரும்பொறையின்


  1. பதிற். 84.
  2. பதிற். 81.