பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384 சேர மன்னர் வரலாறு



“நனிவெம்பும்மன் அளியள் தானே; இனியே
வன்கணாளன் மார்புற வளைஇ
இன்சொல் பிணிப்ப நம்பி, நங்கண்
உறுதரு விழுமம் உள்ளாள்”

என்று தாய் மொழிகின்றாள். காதலனாகிய வன் கணாளன் தன் மகட்கு வன்மை ஊட்டிய திறத்தை, “மார்புற வளைஇ, இன்சொல் பிணிப்ப நம்பி” என்பதனால் மிகவும் அழகுறுச் செப்புகின்றாள். மகளை நினைக்குந்தோறும் தன் மனத்தெழுந்து மிகும் துயரத்தை “நங்கண் உறுதரும் விழுமம்” என்று செல்வது மிக்க நயம் வாய்ந்தது. உறுதரும் என்பது உண்டாகி மிகும் என்று பொருள்படும்.

நும் மகளைக் கொண்டு சென்றவனை வன்கணாளன் என்று சொல்லுகின்றீர்கள்; ஆகவே, வழியில் உண்டாகும் ஏதங்களை அவன் தனது வன்கண்மையால் போக்கி அவளை மகிழ்விப்ப னன்றோ? என்று இதனடியாகக் கேட்போர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும் அதனையும் அவள் எண்ணியே, “வழியில் ஆறலைக் கள்வராலும் விலங்குகளாலும் ஒரு தீங்கும் உண்டாகாது என்பதை அறிவேன்; பகை போக்குவதில் அவனது வன்கண்மை ஒப்புயர்வற்றது; அவள் செல்லும் பாலை நிலத்தின் கொடுமைதான் என் நெஞ்சை நீராய் உருக்குகின்றது” என்பாளாய்.

“தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரிப்
பைதறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை”