பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388 சேர மன்னர் வரலாறு



அதனை வெளியிடமாட்டாள். அவளுடைய மேனியும் செய்கையும் எய்தும் வேறுபாடு கண்டு உரியவரால் உய்த்துணரப்படும் இந்நிலையில், காதலித்த பெண்ணை முற்பட முயன்று வரைந்து கொள்வதற்கு ஆண்மகனுக்கு ஏற்ற தகுதியுளதென்றாலும், வரைவு பற்றிய தூண்டுதலை அவன் தன் காதலிபால் எதிர்பார்க்கிறான் அதன் வாயிலாக அவன் உள்ளத்துக் காதல் இயல்பை நன்கு அறியும் நிலைமை உண்டாகிறது; அதனை அறிவதற்கே அவன் நெஞ்சும் அவாவி நிற்கிறது. அதனால் அவன் விரைவில் வரைவதை விரும்பாதான் போலக் களவொழுக்கத்தை நீட்டிக்கின்றான். அவன் கருத்தை அறியாமையால், அது தலைமைக் குணத்தால் சிறந்த தலைமகட்கு வருத்தம் தருகிறது. அதனை அறிந்த தோழி, ஒருகால் தலைமகன் தலைமகள் இருக்கும் பெருமனையின் ஒரு சிறையில் வந்து நிற்கக் காண்கின்றாள். தான் கூறுவதைக் கேட்டு வரைவின்கண் அவன் கருத்தைச் செலுத்தக் கருதுகிறான். தலைமகளோடு உரையாடுபவள் போல அவன் கேட்கத்தக்கதோர் இடத்தே நின்று, “தோழி, நம் காதலர் நம்மை விரைந்து வரைந்து கொள்ளாமையால் நமக்கு அவருடைய நட்பு மனத்தில் அச்சத்தை எழுப்புகின்றது. முன்பெல்லாம், நம்மிடத்தில் அவருக்கிருந்த காதல் இப்பொழுது குறைந்திருக்கிறது; அவ்வாறு இருக்க, அறவுணர்வில்லாத அன்னை, அவர் நம்பால் பேரன்பால் கூடினவர்போல் நினைத்து ‘அவன் யாங்கு உளன்?’ என்று கேட்கின்றாள். இனி அவர் வருவது அறிந்து நாம் எழுவோமாயின், நமது களவை அறிகுவள்;