பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிப்புரை 395



கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாக்கோதை. சேர மன்னர் குடிநிரலில் இறுதியில் நின்றது கோதையர் குடி. அக் குடியில் தோன்றிய வேந்தர்களான குட்டுவன் கோதை, கோக்கோதை மார்பன் என்போர் வழியில் இச் சேரமான் மாக்கோதை காணப்படுகின்றான். இவன் முடிவில் இறந்துபட்ட இடம் கோட்டம்பலம் என்பது. அஃது இப்போது கொச்சி நாட்டு முகுந்தபுரம் வட்டத்தில் அம்பலக்கோடு என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு உளது.

இந்த மாக்கோதை தன் மனத்துக்கினிய மங்கை ஒருத்தியை மணந்து உயிரொத்த காதலாற் பிணிப்புண்டு இனிது வாழ்ந்தான். அவள் இறந்து போகவே அவன் கொண்ட துயரத்துக்கு எல்லையில்லை. ஒருவனுக்கு மனைவியை இழப்பதால் உண்டாகும் துன்பம் மிகப் பெரிது; அதனிற் பெரியது பிறிதில்லை என அறிஞர் கூறினர். “அத்துணைப் பெரிதாயின், இங்கே என் மனைவியின் உடல் புறங்காட்டில் அடுக்கிய ஈமத்தில் எழுந்த தீயில் எரிந்து போயிற்று; அவளும் மறைந்தாள்; அதனைக் கண்டிருந்தும் என் உயிர் நீங்கவில்லை; இன்னும் யான் உயிர் வாழ்கின்றேனே! என்னே இதன் பண்பு!” என்று எண்ணினான். அந்த எண்ணம் ஒரு பாட்டாய் உருக்கொண்டது.

“யாங்குப் பெரிதாயினும் நோய் அளவு எனைத்தே!
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்;
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் போகிய விளைவிற்கு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி