பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 சேர மன்னர் வரலாறு



உயரமுமுள்ள அணை யொன்று கட்டித் தேக்கி அதன் பெருக்கின் பெரும் பகுதியை வையை யாற்றிற் கலக்கும் சிற்றாறொன்றில் திருப்பிவிட்டனர். அவ்வணையின் கீழ்ச் செல்லும் பேரியாறு, மலைப்பிளவுகளின் வழியாய் மேலைக் கடற்கரைப் பக்கம் இறங்கத் தலைப்பட்டுச் சிறிது சென்றதும், அங்கே வந்து சேரும் பெருந்துறை யாற்றோடு கூடுகிறது; பின்பு அவ்விடத்தினின்றும் இறங்கி வருகையில் சிறுதாணி யெனப்படும் சிற்றாறு வந்து சேருகிறது. சிறிது தூரம் சென்றதும், முதற்கண் குடவாறு வந்து கூடப்பெற்றுச் சிறிது சென்றதும், கொடை வள்ளலான குமணனுக்குரிய முதிர மலையில் தோன்றிவரும் முதிரப்புழையாற்றை வரவேற்றுத் தழீஇக் கொண்டு வட மேற்கு மூலையாகச் சென்று கோகரணிப் பாறை யென்னுமிடத்தே நூறடி யாழத்திற் குதித்து எட்டுக் கல் தொலையில் வீழ்ந்து கிடக்கும் பெரும் பாறையின் அடியிலுள்ள முழைஞ்சினுட் புகுந்து மறைந்து நெடிது சென்று தலை காட்டுகிறது. நீர் மிகப் பெருகி வருங்காலத்தில் அப் பாறைமேல் வழிந்தோடுவது பேரியாற்றுக்கு இயல்பு. இவ் வண்ணம் வெளிப்பட்டு வரும் பேரியாறு வரவர வாயகன்று ஆழம் சிறந்து காட்டு மரங்களைச் சுமந்து செல்லும் பெருக் குடையதாகி, நேரிமங்கலத் தருகில் தேவி யாற்றோடும் அதற்குப் பின் எட்டுக் கல் தொலையில் இடியாறெனப் படும் இடைமலை யாற்றோடும் கூடி 1200 அடி அகலமுடையதாய் இயங்குகிறது. அவ்வளவில் பல குன்றுகட்கிடையே வளைந்தும் நெளிந்தும் செல்லும் இப் பேரியாறு ஆலப்புழையை நெருங்கியதும் இரு