பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரர்கள் 83



என்றும், பொருள்கள் சிறுசிறு நாவாய் வழியாக ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுமென்றும் பிளினி யென்பார் கூறுகின்றார்[1].

ஒருபால் பெருமலையும் ஒரு பால் பெருங்கடலும் நிற்க, இடையில் பெருங்காடு படர்ந்து கொடு விலங்கும் கடுவரற் காட்டாறுகளும் மிக்குள்ள நாட்டைச் சீர் செய்து மக்கள் குடியிருந்து வாழ்வதற்கு ஏற்பச் செம்மைப்படுத்திய பண்டைச் சேர நாட்டு மக்களுடைய தொன்மை வரலாறு எண்ண முடியாத சிறப்பினதாகும். காடு கொன்று நாடாக்கி விளைபொருளும் கடல் வாணிகமும் பெருகுதற்கண் அம் மக்கள் கழித்த யாண்டுகள் எண்ணிறந்த பலவாம். நாட்டு மக்களது . நல்வாழ்வுக் கென அரசு காவலும் செங்கோன்மையும் வேண்டப்படுதலின், அத்துறையில் நெடுங்கால வளவில் அம் மக்கள் பெரும் பணி செய்திருத்தல் வேண்டும்.

நம் நாட்டில் பழமையான நூல்கள் எல்லா வற்றினும் மிகப்பழமை வாய்ந்தவை யெனப்படும் நூல்களில் இந் நாட்டுச் சேரமன்னர் குறிக்கப் பெறுவதால், இவர்களது முதல் தோற்றம் வரலாற் றெல்லைக்கு அப்பாற்பட்டது என்பது சொல்லாமலே விளங்கும்.

சோழநாடு சோழவளநாடு என்றும், பாண்டிநாடு பாண்டி வளநாடென்றும் வழங்கியதுண்டு; அவற்றைப் போலவே, சேரநாடு சேரவளநாடு என்றும் தொடக் கத்தில் வழங்கிப் பின்பு சேரலர் நாடு என மருவிற்று;


  1. Nagam Iyer T. V. C. Manual Vol.i.op. 291.