பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 163 எட்டியாயிற்று. அதிகாலையில் அவர்கள் கூடுவாஞ்சேரிக்கு அருகில் வண்டியை நிறுத்திக் காலைக்கடன்கள் முடித்துவந்தனர். இனி பகலுணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டு பசியாறியபின், ஒரு சுற்று ஊரைப் பார்த்துவிட்டு இரவு பத்து மணியளவில் கிளம்ப வேண்டியதுதான். "நான் கோபுக்குக் கடிதாசி எழுதியிருக்கிறேன். இப்ப கிளம்பட்டுமா? விடைபெற நிற்கும் சம்முகத்தைப் பொன்னடியான் நிறுத்துகிறான். "ஏன் காம்ரேட்? இப்பதா ஃபுட் பாக்கெட் ஏற்பாடு பண்ணிருக்காங்க, சாப்பிட்டுவிட்டு வண்டில இவங்க எல்லாருடனும் ஒரு சுத்து நீங்களும் பார்க்க வாங்க சாங்காலம் அஞ்சு மணிக்குத்தா ஆபீசில இருந்து மகன் வருவாரு வண்டி அநேகமா விடிகாலமதான் கெளம்பும். நீங்க எடம் சொல்லுங்க. வந்து பிக்கப் பண்ணிக்கிறம்!” சம்முகத்துக்கு இது உவப்பாக இருக்கிறது. மகன் ஆயிரம் விளக்குக்குப் பின்னே ஒரு குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் இருப்பதாக முகவரி கொடுத்திருக்கிறான். மாலை ஐந்து மணி சுமாருக்கு அங்கு வந்து இறங்கும் சம்முகம் முடிந்தால் இரவே சங்கத் தலைமை அலுவலகத்தில் வந்து சேர்ந்து விடுவதாகச் சொல்லி விடைபெறுகிறார். அடுக்கு வீடுகளைச் சுற்றிக் கசகசவென்று இரைச்சல்: அழுக்கும் புழுதியுமாகச் சிறுவர் சிறுமியர், இளைஞர், ஆடவர், பெண்டிர் தரையோடு இருக்கும் குழாயைச் சுற்றிய மேடை பெயர்ந்து பொக்கையும் பொள்ளையும் நாற்றமும் பாசியுமாக பெண்டிர் கூச்சலும் வசையுமாக இருக்கிறது. கிராமத்திலும் இவை இருக்கின்றன. ஆனால். அங்கு இல்லாத கபடம் இங்கே வேரோடிப் போயிருக்கிறது. படி ஏறி மூன்றாம் மாடிக்குச் செல்லவேண்டும் என்று கண்டு கொள்கிறார். படியேறும் போதே புதிய ஆள் என்பதை அவர் துண்டும் முகமும் காட்டி விடுகின்றன. தலையைச் சொறிந்துகொண்டு அழுக்குப் பனியனுடன் வரும் ஒரு பரட்டை இன்னொரு கையில் பிடித்த புகையும் துண்டு பீடியுடன், "ஆரு நயினா? ஆரப் பாக்க வந்த?” என்று விசாரிக்கிறான். "கோபால்னு. கைத்தறி ஆபீசில வேல பண்றாரு..."