பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சேற்றில் மனிதர்கள் சுற்றிக்கொண்டு வயல்களினுாடே செல்கிறார். ஒரு ஈ காக்கை தென்படவில்லை. அந்த நேரத்துக்கு வெயிலும், கதிர் வந்து தலையசைக்கும் பயிரின் மென்மையான வாசனையும் அவருக்கு உறுத்தவில்லை. அம்மன் கோயில் சேரியின் முன் வண்ணார் குளத்தின் பக்கம் புதியதொரு சுவரொட்டி குடிசைச் சுவரொன்றில் தெரிகிறது. 'ஊனமுற்றோருக்கு நல்வாழ்வு சைக்கிள் வழங்கும் திட்டம்!...” 'விதவையருக்கு மறுவாழ்வு - உதவித் தொகையளிக்கும் திட்டம்!...” - தொழிலாளிகளுக்குச் சாதனங்கள் அளிக்கும் திட்டம்.' அந்தச் சுவரொட்டியைத் தவிர, வேறு எதுவும் சேரியில் புதுமையாகத் தெரியவில்லை. வண்ணார் குளம் நாகரிகக்காரியின் அற்ப உடைபோல் பாசியாடை உடுத்துத் தன் வறட்சியை மறைத்துக் கொண்டி ருக்கிறது. மேல் சாதியார் அங்கு வரமாட்டார்கள். அழுக்கு வண்டுகளைப் போல் சில குழந்தைகளும் சிறுவர் சிறுமியரும் பாதையில் நடந்துவரும் அவரை முறைத்துப் பார்க்கின்றனர். மற்றபடி எந்த உற்சாக உயிர்ப்பும் இல்லை. வீடுகளெல்லாம் வறுமையினால் தன் மேனி மறைக்க இயலாத குமரி, கந்தல் கொண்டு மூடி நாணிக் கண் புதைப்பதைப் போல் கண் புதைத்துக் கிடக்கின்றன. ஒன்றில் ஒரு கிழவி, மேல் சீலைக் கிழிசலுடன் இனிமேல் எனக்கென்ன என்று உட்கார்ந்து கிடக்கிறாள். "ஆயா, தேவு வூடு எங்க இருக்கு?” ஆயாவுக்குக் குரல் காட்டக்கூடச் சக்தியில்லை போலும்! கையை மட்டும் அந்தத் திசையில் அசைக்கிறாள். இதென்ன, ஊரே சுடுகாடா போயிட்டாப்புல ஆரயும் கானோம்...! படலைக்குள் சில குடிசைகள், சொறி நாய்கள். ஆட்டுப் புழுக்கைகள் நிறைந்த திண்ணையில் இன்னொரு கிழம். பிறந்த மேனியில் ஒரு பயல் அழுதுகொண்டு நிற்கிறான். “ஏண்டா அழுவுற? அம்மால்லாம் எங்க?" பையன் விசித்து விசித்து அழுவதிலேயே இருக்கிறான்.