பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சைவ இலக்கிய வரலாறு

கோயிலில் திருஞானசம்பந்தர்க்குக் கோயில்கண்டு அதன் கண் ஆண்டுதோறும் ஞானசம்பந்தர் ஞானப்பால்பெற்ற திருவிழாவைக் கொண்டாடயிருக்கின்றனர் என அவ்வூர்க்கல்வெட்டொன்று [1]கூறுகிறது. இவ்விழா சீர்காழியில் இப்போதும் நடந்து வருவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. தில்லைக் கோயிலில் திருஞானசம்பந்தர்க்குத் தனியே ஒர் கோயில் இருந்ததெனவும், அது காளிங்கராயன் என்பனால் பொன்வேயப் பெற்றதெனவும் தில்லையிலுள்ள கல்வெட்டொன்று[2] கூறுகிறது. சிர்காழியிலுள்ள திரு ஞானசம்பந்தர் கோயிலுக்குத் தலைச்சங்காடு, குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம், திருமுல்லைவாயில், திருவாக்கூர் முதலிய ஊர்களிலுள்ள மகாசபையினர் கோயில் வழிபாட்டுக்கும் கோயில் பழுது பார்த்தற்குமாக, மிக்க நிலங்களை விட்டிருக்கின்றனர். இக்கோயிலில் ஞான சம்பந்தர் பாடிய பதியங்களை இசைநெறி வழுவாமற்பாடுதற்காக இசைக் கல்லூரியை எற்படுத்தி, அதன்கண் தங்கி இசை கற்பிக்கும் ஆசிரியர்கட்கு நிலம் விட்டிருக்கின்றனர்.[3],

இடைக்காலத்தே தமிழகத்தை ஆண்ட வேந்தர்கள் நாட்டாட்சிக்குக் சிறந்த உறுப்பாகத் திருக்கோயில்களை எழுப்பி அவற்றிற்கு ஊரும் நிலங்களும் பொன்னும் மிகைப்படக் கொடுத்து, இன்றைய அரசியலறிஞர் அனவரும் எண்ணி யெண்ணி வியக்கத்தக்க வகையில் தங்கள் அரசியலாட்சி முறையை நடத்தினர் என்ற செய்தி நாடு அறிந்ததொன்று.இக்கோயில்கள் பலவும்தனித்தனிச்சபைகளால் ஆளப்பெற்று வந்தன. கோயில் காரியம் பார்க்கும் சபைகள் இல்லாத கோயில்களை அவ்வவ்வூர்களை ஆளும் மகா சபைகள் ஆட்சி செய்தன. இக் கோயில்கட்கெனத் தனித்தனிப் பண்டாரங்கள் (Treasury) இருந்தன; அவற்றின் வரவு செலவு குறிக்கும் கணக்குகளும் தணிக்கை செய்யும் தனிக் குழுக்களும் இருந்தன. இக்கோயில்கள்


  1. I. A. R. No. 601 of 1917.
  2. 2. S. I. I. VoH. IV. No. 225.
  3. 3. A. R. No. 374-388 of 1918.