பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

சைவ இலக்கிய வரலாறு

கின்றனர். அவருள் தமிழகத்து வரலாறோடு முதன் முதலாக இயைபு பெறுபவன் சிம்மவிஷ்ணு என்பவனாவான். இவன் முன்னோருள் புத்தவன்மனென்பவன் தமிழகத்துட் புகுந்து சோழர்களை வென்றானென்று செப்பேடுகள் சில[1] கூறுகின்றன. ஆயினும், அவன் தமிழகத்தில் அவர்களை வென்றதன் குறியாக அரசு நிலை கண்டதாகத் தெரியவில்லை. அவனோடு பொருத சோழ பாண்டிய மன்னர்களின் பெயர்களும் தெரியவில்லை. ஆதலால் முதன் முதலாகத் தமிழகத்துட் புகுந்து தொண்டைநாடு முழுதும் கவர்ந்து பல்லவ அரசினைக் கண்டவன் சிம்ம விஷ்ணு என்பது வரலாற்றாராய்ச்சி முடிபு.

சிம்மவிஷ்ணு: இவன் கி. பி. 575 முதல் 600 வரை அரசு புரிந்தான் என்பர். இவன் தந்தை சிம்மவன்மன் எனப்படுவன்.

மகேந்திரவன்மன்I: இவன், சிம்மவிஷ்ணுவுக்குப்பின் பல்லவ வேந்தனாக விளங்கியவன்; கி.பி. 600 முதல் 630 வரை ஆட்சி புரிந்தான்.

நரசிங்கவன்மன்I: இவன் முதல் மகேந்திரவன்மனுடைய மகன்; இவனே வாதாபிகொண்ட நரசிங்கவன்மன் என்றும் பல்லவமல்லனென்றும் கூறுவர். இவன் கி.பி. 630 முதல் 660 வரை அரசு செலுத்தினான் என்பர்.

மகேந்திரவன்மன் II: இவன் முதல் நரசிங்கவன்மனுக்கு மகன் இவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் தத்தமக்குரிய வருணாசிரம முறை தவறாது ஒழுகினர்[2] என்று செப்பேடுகள் கூறுகின்றன.

பரமேசுரவன்மன்: இவன் இரண்டாம் மகேந்திரனுக்குப் பின்பு அரசுகட்டிலேறியவன்; இவனே இரண்டாம் மகேந்திரவன்மனுக்குத் தம்பி என்பர்.

நரசிங்கவன்மன் II (680-700): இவனுக்கு இராசசிங்கன் என்றும் வேறு பெயருண்டு. இவன் பரமேசுரவன்மனுக்கு மகன். கச்சியில் கயிலாயநாதர் கோயிலைக்


  1. Pallavas of Kanchi. P. 84-5.
  2. “S. L.. I. Vol. 1, p, 148 "ஸுப்ரணித வர்ணாச்ரம தர்ம.”