பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

9

வந்தபோது, குண்டூர் மாவட்டத்திலுள்ள நாகார்ச்சுனி குண்டாவில் ஒரு புத்த விகாரம் இருந்ததென்பது அவருடைய குறிப்புக்களால் விளக்கமுறுகின்றது. அந்நாளை அரசர்களான பல்லவர்கள் வைதிக சமயத்தவராகக் காணப்பட்டனர். ஆயினும் அவர்கள் வேற்றுச்சமயங்களான புத்த சமண சமயங்கள்பால் காய்ப்புக் கொண்டவர்களல்லர், தம்மால் இயன்ற அரசியற் பாதுகாப்பும் உதவியும் புரிந்துள்ளனர்.

கி. பி. ஏழாம் நூற்றாண்டில் ஹியூன்சாங் என்ற சீனர் ஒருவர் தென்னாட்டுக்கு வந்தார். அவரும் பாகியானைப் போலவே குறிப்புக்கள் பல எழுதி வைத்துள்ளார். அவர் ஆந்திர நாட்டுக்கு வந்தபோது அந்நாட்டில் இருபதுக்குக் குறையாத சங்காராமங்கள் இருந்தன; அவற்றில் மூவாயிரத்துக்குக் குறையாத புத்த துறவிகள் இருந்தனர். வெங்கி நாட்டில் வெங்கி நகர்க்கு அண்மையில் ஒரு புத்த சங்காராமம் இருந்து மிக்க சிறப்புக் கொண்டு திகழ்ந்தது. அமராவதிக்கருகிலுள்ள தரணிக்கோட்டையில் புத்த சங்கங்கள் பல இருந்தன. பின்பு அவற்றுள் பல பாழ்பட்டமையின் அவர் காலத்தே இருபது சங்கங்கள் சிறப்புடன் இருந்தன. அங்கே புத்த துறவிகள் ஆயிரவர்க்குக் குறையாமல் இருந்தனர். அவர்கள் பெரும்பாலார் புத்த சமய மகாசங்கிகமுறையை மேற்கொண்டவர்கள். விசயவாடைக் கருகிலுள்ள குன்றுகளில் பூருவசீலம் அபரசீலம் என்ற இருவகைப் புத்த சங்கங்கள் இருந்தன.

தமிழகத்துச் சோழநாட்டில் புத்த சங்கங்கள் பல இருந்தனவெனினும் அவை பாழ்பட்டுக் கிடந்தன. மிகச் சிலவற்றில்தான் புத்தர்கள் இருந்து வந்தனர். இந்நாட்டின்[1] தலைநகர்க்கருகில் அசோகமரத்தோப்பும், புத்தர் இருந்து அறவுரை வழங்கும் பீடிகைகளும் இருந்தன.


  1. 1. இத்தலைநகர் நெல்லூராக இருக்கலாமெனப் பெர்க்கூசன் (Fergusson) கருதுகின்றார். அஃதுண்மையாயின், சோழநாட்டின் பரப்பு நெல்லூர் மாவட்டத்தையும் தன் கண் கொண்டிருந்தமை தெளிவாம்.