பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

சைவ இலக்கிய வரலாறு


இனி, சோழநாட்டுத் திருப்பதிகள் பலவும் மருதநலம் சிறந்தனவாகும். அவற்றுட் கலயநல்லூர் என்பது ஒன்று. இப்போது அது சாக்கோட்டை என வழங்குகிறது. இடைக் காலத்தே ஷாஜி யென்பான் ஒருவன் இங்கே இருந்து கோட்டை யமைத்து இப்பகுதியை ஆண்டான் என்றும், அது முதல் இவ்வூர் ஷாஜிக் கோட்டை என்று பெயர் பெற்று முடிவில் சாக்கோட்டையென மருவி வழங்குவதாயிற்று என்றும் கூறுகின்றனர்.[1]. இஃது அரிசில் ஆற்றின் தென்கரையில் மருத வயல்கட்கு இடையே மிக்க வனப்புடன் விளங்குகிறது. இதனைக் குறிக்கும் நம்பியாரூரர், “பரமன் உறையுமூர் நிறைநீர் ஒழுகுபுனல் அரிசிலின் தென் கலயநல்லூர்”சு[2] என்று இயம்புகின்றார்.

இவ்வூர் அருகே ஓடும் அரிசிலாறு கும்பகோணத்துக் கண்மையில் அரிசிலுரர் என்னுமிடத்தேகாவிரியிற் பிரிந்து வருகிறது. அரிசிலுரர், சங்க காலத்தே அரிசில்கிழார் முதலிய சான்றோர் தோன்றுதற்கு நிலைக்களனாம் சிறப்புற்று இடைக் காலத்தும் தனது இருப்பு மறையாதே இருந்து[3] இந்நாளில் மறைந்து போயிற்று.

காவிரியின் பிரிவாதலால், அது கொணரும் வளமெல்லாம் அரிசிலாறும் பகிர்ந்து கொணர்ந்தது. அதன் வெள்ளத்தில் வெண் கவரியும் கரும்பீலியும் வேங்கை கோங்கு முதலியவற்றின் மலரும் மிதந்து வந்தன. மலைநாட்டு ஏலம் இலவங்கம் முதலியனவும், பலவகைப் பழங்களும், அகில் சந்தனம் முதலிய விரைப் பொருள்களும் முல்லை மல்லிகை செண்பகம் முதலியனவும் அரிசிலாற்றின் வருவாயாயின. யானை மருப்பும் பொன்னும் மணியும் கரை மருங்கில் ஒதுக்கப்பட்டன.

இவ்வாற்றின் பெருக்கால் வயல்கள் நீர்வளம் மிகுதலின், இனிய பொழில்களும் அழகிய பொய்கைகளும் செல்வ மாடங்கள் மலிந்த திருவீதிகளும் கொண்டு ஊர்


  1. Tanjore Gazetteer. Vol. I. p. 43
  2. ங், தே. 16 , 11.
  3. A. R. No. 253 of 1911.