பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாரூரர்

221

கூடல் நகர்க்கண் புன்னையும் ஞாழலும் செறிந்த பொழில்களில் குருக்கத்தி படர்ந்துவிளங்க, அவற்றிடையே குயில்கள் இருந்து கூவுகின்றன. வேறொருபால் கமுகும் தென்னையும் பலாவும் விரவிக் குளிர்ச்சி மிகுந்துள்ள பொழில்கள் உள்ளன. இங்கே செல்வ மக்களும் வன வேட்டுவரும் விரும்பி வாழ்கின்றனர்.[1]

பாண்டி நாட்டுத் திருப்பதிகளுள் திருப்புனவாயில் என்பது ஒன்று; இது திருவாடானை வட்டத்தில் கடற்கரையைச் சார்ந்த பாலை நிலப்பகுதியில் இருப்பது. இதன் பாலை வடிவம் நம்பியாரூரர் கண்களுக்குத் தெரிகின்றது. அதனே அவர் அத் திருப்புனவாயிற் பதிகத்தில் விளங்கக் காட்டுகின்றார். பாலை நிலத்தில் வேட்டுவர் வாழ்வர். அவர்கள் அப்பகுதியிற் செல்லும் வழிப்போக்கர்களையும் வணிகர்களையும் குறையாடுவது இயல்பு. “இதனை, மறவேடுவர் பொருது சாத்தொடு பூசல் அருப்புனவாயிலே”[2] என்பர்.

இப்பகுதியில் சிறு சிறு கற்குன்றுகளும் தூறுகளும். கடுவெளியும் புற்கென்ற காட்சி தருகின்றன. கடுவெளியில் மானினங்கள் வாழ்கின்றன. அவற்றையும் அங்கு வாழும் வேட்டுவர் அலைப்பதனால் அவை அவர்கட்கு அஞ்சி ஒளிந்து வாழ்கின்றன. ஆங்காங்கு நிற்கும் கள்ளி மரங்களின் கவடுகளிலிருந்து புறாக்கள் பெடைகளைப் பயிரும்; நிலம் செங்கிறமுடைமையின், “பொன்புனம்” என்றும் “செந்தாரை” யென்றும் குறிக்கப்படுகிறது. இங்கே வெயில் வெம்மை மிக்கிருத்தலால் கள்ளிகளும் வற்றி விடுகின்றன; புல் தீய்ந்து கரிந்தொழிகிறது; அவ்வெம்மையைக் கழித்தல் வேண்டிப் புள்ளிமான்கள் தூறுகளில் மறைந்து உறைகின்றன. கல்லும் தூறும் நிரம்பிக் கரிந்து தோன்றும் அக்கருங்காட்டில் மேயும் கோழிகள் புற்றுக்களின் மேலேறிக் கூகூ வெனக் கூவுகின்றன.[3]


  1. சுங். தே. 42 : 1-10.
  2. ௸ 50 : 2.
  3. ௸ 50 : 1-10.