பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான்பெருமாள்

261

இங்கிதப் பாட்டுக்கள், இனிய சொல்லாடல், இனிய காட்சி வழங்கல் முதலிய பல பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றின் நலம் காணுமாற்றால், விரிவஞ்சி, வகைக்கு ஒன்றாக ஈண்டுக் காட்டுகின்றோம்.

நூல் பாடிய காரணம்

சேரமான், தான் பொன் வண்ணத் தந்தாதியைப் பாடுதற்குற்று காரணத்தை ஏனை நூலாசிரியர்களைப் போல நூலின் தொடக்கத்திலோ முடிவிலோ கூறாமல், நூலைத் தொடங்கி இருபது பாட்டுக்கள் பாடின பின்பு கூறுகின்றார். முதற்கண் தமக்குக் கவிபாடும் வன்மையில்லையென்றும், பிறர் உரைத்தவற்றையே எடுத்துரைப்பின் அறிஞர் ஏலார் என்றும், தாம் சொல்லுவன புன்சொற்கள் என்றும், அவற்றை ஏற்கவேண்டும் என்றும் எடுத்துரைப்பாராய்,•

"தெள்ளிய மாந்தரைச்சேர்ந்திலன் ; தீங்கவி
பாடலுற்றேன் ;
ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் :
உரைத்தார் உரைத்த
கள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார் : கடல்
நஞ்சு அயின்றாய் !
கொள்ளிய வல்ல கண்டாய்,புன்சொல்
ஆயினும் கொண்டருளே"[1]

என்று இயம்புகின்றார். இத்துணைக் குறைபாடு கூறிக் கொள்வோர் பாடாதொழியலாமே என எழும் தடைக்குச் சேரமான் விடையும் கூறுகின்றார். "அமரர் குழாம் நின்னைப் பொருண்மொழிகளால் போற்றிப் பரவக் கண்டேன்; அக்காட்சி என்னையும் பாடுமாறு ஊக்க அடியேன் பாடலுற்றேன் என்பாராய், "இருள் ஆசற எழில் மாமதி தோன்றவும் என்றது என்ன, வெருளாது எதிர் சென்று மின்மினிதானும் விரிகின்றதே",[2] என்று கூறுகின்றார்.


  1. பொன் வண்.24
  2. ௸ 25