பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சைவ இலக்கிய வரலாறு

துள்ளனர். ஜினகாஞ்சியென்பது காஞ்சிபுரத்துக்கு அண்மையில் இரண்டுகல் தொலைவில் வேகவதியாற்றங்கரையிலுள்ள திருப்பருத்திக்குன்றம் எனப்படும் ஊராக இருக்கலாமென அறிஞர் கருதுகின்றனர்.

இத்திருப்பருதிக்குன்றத்தையும் இங்குள்ள கோயில்களையும்பற்றியெழுதிய திரு. T. N. இராமச்சந்திரன் என்பார், “இங்குள்ள கோயில் இரண்டனுள் ஒன்றாகிய சந்திரபிரபா கோயில் பல்லவர்காலத்து வேலைப்பாடமைந்துள்ளது; அதனaல் அதனை நந்திவன்ம பல்லவன்கட்டியிருக்கலாம்” என்று கூறுகின்றார். அப்பல்லவன் சமய வேறுபாடு கருதாத வேந்தனாதலால் அவன் காலத்தில் சமணர்கட்குத் தீங்கில்லையாக வேண்டும்; மேலும் அவன் காலத்தே வடார்க்காடுமாவட்டத்து ஆர்க்காட்டுக்கு அண்மையிலுள்ள பகுதிகளில் சமணர்கள் வாழ்ந்தனர். கற்குகைகள் பல அங்கே[1]உள்ளன. அம்மாவட்டத்து வெடால் என்னும் ஊரிலுள்ள[2] கற்குகை சமண் பாழியாக இருந்திருக்கிறது. இது இடைக்காலச் சோழருள் முதலாதித்தன் காலத்தும் இருந்திருக்கிறது. இதனை.திரு. இராமச்சந்திரன் கூறியது பொருத்தமாகவேயுளது.

புதுக்கோட்டை நாட்டில் சித்தன்னவாசல், தேனிமலை, நார்த்தாமலை முதலிய இடங்களில் குகைகள் அமைத்து அங்கே சமண் சான்றோர்கள் வாழ்ந்திருக்கின்றனர். மகேந்திரவன்மனுடைய கல்வெட்டுக்களும் அந்நாட்டுக் குடுமியான்மலை முதலிய இடங்களில் உள்ளன. இவற்றைக் கொண்டு நோக்குமிடத்து, முதல் மகேந்திரன் சைவனாகிச் சமண் சமயத்தின் வேறுபட்ட கருத்துடையனாகவே, அவன் சலுகை குன்றுவது கண்ட சமண் சான்றோர் மக்கள் வழங்குவதில்லாத இடங்களில் குகை யமைத்து வாழலுற்றனர் போலும் என நினைத்தற்கு இடமுண்டாகிறது.


  1. 1. Ep. Ind. IV. p. 137.
  2. 2. A. R. No. 81 of 1908. 3. A. R. No 82 & 84 of 1908.