பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

25

களாய் மாறியது காரணமாகப் பகைவர் கைப்பட்டுச் சீர் குலைந்தன. இது நிற்க, பல்லவர் காலத்தே இக்கல்விக் கடிகை பகைவரது தீச் செயல்கட்கு இரையானதற்கு, அரசியலில் தொட்ர்பு வைத்துக் கொண்டதே காரணமாகும். நந்திவன்ம பல்லவமல்லனைப் பல்லவ வேந்தனாகக்கைக் கொண்டு வந்த காலத்தில் இக்கடிகையாரும் பெரும் பங்கு கொண்டிருந்தனர். பல்லவமல்லனுக்குமுன்பு காலற்றுப்போக இருந்த பல்லவவரசுக்கு இக்கடிகையைச் சேர்ந்த தரணி கொண்ட போசர் இரணியவன்மனையடைந்து பல்லவமல்லனை வேந்தனாகத் தருமாறு வேண்டிக்கொண்டதும், அதற்கிசைந்த இரணியன் பல்லவமல்லனைக் காஞ்சிக்குப் பல்லவவரசனாகச் செல்ல விடுத்ததும் முன்பே கூறப் பட்டன. பகைவரால் இக்கடிகைக்குண்டான கேடு இரண்டாம் நரசிங்கவன்மன் காலத்தில்தான் நீக்கப்பெற்றது; சிறப்பும் மிகப் பெற்றது.

திருவல்லம் கல்வெட்டொன்றையும், பிரமதேசத்துக் கல்வெட்டுக்களையும் கருவியாகக்கொண்டு, வடவார்க்காட்டுச் சோளிங்கபுரத்துக்குக் கடிகாசலம் என்றொரு பெயரிருப்பது காட்டி, அங்கே ஒருகடிகை இருந்திருக்கலாமென்று காண, டாக்டர் மீனாட்சியார் பெரிதும் முயன்று, அங்கே வைணவ பிராமணர் கடிகையொன்று பல்லவமல்லன் காலத்தில் இருந்திருக்கக் கூடுமென்று நினைக்கின்றார்.

கடிகையென்பது பிராமணரிருக்குமிடமெனவும். இங்கே கல்வி கேள்வி யாராய்ச்சி நடைபெறுமெனவும் கூறுவர். வேதியர்கள் ஒருங்கு கூடி நூலாராய்ச்சி செய்தலும் முறை வழங்குதலும் செய்யுமிடம் “கடிகை ஸ்தானம்” என்று குறிக்கப்படுகிறது. இக்குறிப்புக்களையே கருவியாகக்கொண்டு நோக்குவோமாயின், இக்கடிகைகள் பாண்டி நாட்டுக் கடிகைப்பட்டின முதலிய இடங்களிலும் இருந்திருக்கலாமெனக் கருதுதற் கிடமுண்டாகிறது. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கன்னட நாட்டில் இத்தகைய கடிகைகள் இருந்திருக்கின்றன. இவற்றை அவை கடிகையென்னாது பிரமபுரிகள் என்று குறிக்கின்றன.