பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

29

கல்வெட்டொன்று,[1] நிரஞ்சன குருவின் மாணவரான சதுரானன் பண்டிதரென்பார். சில நிவந்தங்களை நிரஞ்சனேச்சுரத்துக்கு விட்டனரெனவும், அச்சதுரானன பண்டிதர் கேரள நாட்டினரெனவும், அவர் நிரஞ்சன குரவர்பால் துறவு நெறி மேற்கொண்டு அவர்க்கு மாணவராயினரெனவும், நிரஞ்சன குரவருக்குப் பின் சதுரானன பண்டிதரே மடத்துக்குத் தலைவராயினரெனவும் கூறுகிறது. இம்மடங்களும் கோயில்களும், வடமொழி வியாகரணம், வேதாந்தம், பிரபாகரம், மீமாஞ்சை முதலியவற்றையே கற்பார்க்குக் கற்பித்து வந்தன. திருவொற்றியூரில்[2] வியாகரண மண்டபம் என்றொரு மண்டபமிருந்தது. கும்பகோணத்து நாகேஸ்வர சுவாமி கோயிலில்[3]பிரபாகர மீமாஞ்சை கற்பிக்கப்பட்டது.

சைவ இலக்கியங்கள் பல்லவ பாண்டியர் காலத்தில் தமிழ்நாடிருந்த நிலையும் சமயத்துறையில் பௌத்தம், சமணம் இருந்த நிலையும் சைவக் கோயில்களும் மடங்களும் இருந்த நிலையும், அவற்றாலும் வேந்தர்களாலும் வடமொழி பேணப்பெற்று வந்த நிலையும் இதுகாறும் கண்டு வந்தோம். இக்காட்சியில் தமிழகத்துக்கேயுரிய தமிழ்மொழி எந்நிலையில் பேணப்பெற்றது என்பது காணப்பெறவில்லை. தமிழ்நாட்டில் இப் பல்லவ பாண்டியர் காலத்துக்கு முன்பே தமிழ்க்கு ஆக்கமாகும் பணிகள் வீழ்ந்துவிட்டன. பல்லவர்களின் கல்வெட்டுக்களோ பாண்டியர்களின் ஏடுகளோ எவையும் தமிழ் இலக்கியத் துறையையோ தமிழ்க் கல்வியின் வளர்ச்சியினையோ சிறிதும் கூறுகின்றில. கோயிற் சுவர்களிலும் ஒருசில செப்பேடுகளிலும் தொடர்புடைய ஊர்களையும் அவற்றின் எல்லைகளையும், விலையாவணங்கள், உடன்படிக்கை முதலிய செயல் வகைக்குரிய வக்கணைகளையும்


  1. A. R. No. 181 of 1912.
  2. A. M. Ep. Report for 1913, p. 86
  3. M. Ep. Report for 1912. p. 65.