பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சைவ இலக்கிய வரலாறு

தமிழில் பொறித்ததொன்று தவிர, வேறு தமிழிலக்கியத் துறையில் ஒரு நிகழ்ச்சியும் காணப்படவில்லை. தென் தமிழ்நாட்டுக் கூடல் நகர்க்கண் இருந்ததாகக் கூறப்படும் சங்கத்தையாதல், சங்கத்தின்கண் வளர்ந்த தமிழ் இலக்கியங்களையாதல், தமிழ் பயிலும் கல்லூரிகளையாதல் இக்காலநிலை யறிதற்குப் பயன்படும் சான்றுகளில் காணப்படவில்லை. கி. பி. ஆறாம் நூற்றாண்டு முதல் சிறந்து விளங்கிய பல்லவ பாண்டியர்களின் காலம், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளித்த காலமெனக் கூறுதற்கு இயைபொன்றும் இல்லையென்பேமாயின், அது மிகையாகாது. இக்காலத்தே வாழ்ந்த வேந்தர்களும், வேதியர்களும், மடத் தலைவர்களும், சமயப் பணியாளரும், பிற செல்வர்களும், வடமொழி நமது நாட்டில் வளம்பெறப் பரவுதற்கு முயன்றுள்ளனரேயன்றி நாட்டுமொழி வளம்பெறுதற்கு முயற்சி யொன்றும் செய்தாரல்லர். பெருஞ்செல்வ நிலையங்களாய்ச் சிறந்து வந்த கோயில்களிலும் தமிழ் பயிலுதற்கு இடம் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்மொழி செல்வாக்கிழந்து சிறப்புக் குன்றிய காலம் இந்தக் காலமாகும். இந்தக் காலத்தில் வீழ்ந்த செந்தமிழ், இருபதாம் நூற்றாண்டின் செம்பாதி கழிந்தும் தலையெடுத்து, நாட்டவருடைய அரசியல், வாணிகம், சமயம் என்பன முதலிய துறைகளில் சிறந்த இடம் பெற்று இலக்கிய வளம் பெறும் நிலைமையினைப் பெறாதாயிற்று. கல்லிலும் செம்பிலும் எழுதும் எழுத்துமுறை பல்லவர் காலத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்தது; எனினும், அதனை இன்றியமையாது சிறந்த முறையாக நிறுவிய முதன்மை பல்லவர்களது என்னலாம். தொடக்கத்தில், கல்லிலும் செம்பிலும் எழுதப்பட்டவை. நாட்டு நடப்பிலிருந்த தமிழ் மொழியிலே இருந்திருக்க வேண்டும். பல்லவர்களுடைய பழமையான தமிழ்க் கல்வெட்டுக்கள் மூன்று உண்டு. என்றும், அவை முறையே திருக்கழுக்குன்றம்.[1] செங்கற் பட்டு மாவட்டத்திலுள்ள வல்லம், புதுக்கோட்டை நாட்டில்


  1. A. R. No, 65 of 1909.