பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேந்தனார்

391

இவ்வாறே, “மானேர் கலை”[1] எனத் தொடங்கும் திருப்பாட்டில் சேந்தனார், திருவாவடுதுறை இறைவனை, “சிவலோக நாயகச் செல்வமே” என்று புகழ்ந்து பாடினர்: அதன் நலங்கண்ட இளங்காரிக்குடி கங்கை கொண்ட சோழ அனந்த பாலன் என்பான், திருவாவடுதுறையில் “சிவலோக நாயகன் மடம்”[2] என ஒரு மடம் நிறுவி அடியார்கட்குச் சோறு போட நிவந்தமளித்துள்ளான்.

திருவாவடுதுறைக் கோயிலுக்கு ஆவடு துறையென்றும் ஊர்க்குச் சாத்தனூர் என்றும் பண்டை நாளிற் பெயர் வழங்கினமை கல்வெட்டுக்களால்[3] அறியப்படுகிறது. சேந்தனார், சாத்தனூரைச் சாந்தை[4] என்றும் சாந்தையூர்[5] என்றும் உரைக்கின்றார்.

திருவிடைக்கழித் திருவிசைப்பாவில், திருக்குராவுடைய திருக்கோயிலில் இருக்கும் முருகப் பெருமானையே சேந்தனார் பாடியுள்ளார். இப்போதும் அங்கு முருகன் கோயில்தான் உள்ளது: கல்வெட்டுக்களும் முருகன் கோயிலில்தான் உள்ளன. அவைகளும் பிள்ளையார் திருவிடைக்கழித் திருக்குராவுடையார்[6] என்றே கூறுகின்றன. திருவிடைக்கழியில், சோளேச்சுரம் என்றொரு பழைய சிவன் கோயில் உண்டென்றும், அது சங்க நூல்களில் சான்றோராற் பாராட்டப் பெற்றிருக்கும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனுடைய பள்ளிப்படையாகலாம் என்றும் காலஞ் சென்ற தமிழாசிரியர் திரு. முத்துத்தாண்டவராய பிள்ளை கூறுவர்.

இனி, திருவிடைக்கழியில் சேந்தனார் காலத்தில் வேதியர் பலர் வைதிக நூல்களில்வல்லுநராய் இருந்திருக்கின்றனர். அவர்களைத் தெரிந்த வைதிகர்[7] தெருண்ட வைதிகர்[8] என்று சேந்தனார் குறிக்கின்றார். சோழ வேந்தனை மூன்றாம் இராசராசன் காலத்தில் மலையாள நாட்டினின்று


  1. சேந். திருவிசை. 2 : 9.
  2. A. R. No. 101 of 1925
  3. A. R. No. 148 of 1925.
  4. சேந். திருவிசை. 2:2.
  5. சேந், திருவிசை. 2 : 3.
  6. A. R. No. 269 of 1925.
  7. ௸ 3:7.
  8. சேந் திருவிசை. 3:9.