பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்திக் கலம்பகம்

397



கலம்பக வரலாறு

நந்திக் கலம்பகம் பாடப்பெற்றது பற்றித் தொண்டைமண்டல சதகம்[1] ஒரு வரலாற்றைக் குறிக்கிறது. நந்திவன்மனுக்குத் தம்பியர் சிலர் இருந்தனர். எவ்வகையாலோ அவர்கள் தமையன்பால் பகைமைகொண்டு அவனைக் கொல்ல முயன்றனர். வேறு வகையால் அவனைக் கொல்ல இயலாமைகண்டு, ஒரு புலவனைக் கொண்டு நந்திவன்மனுக்கு இறுதிவிளைக்கக் கூடிய எழுத்துக்களை இடையிடையே தொடுத்து இனிய செய்யுளால் அமைந்த இக்கலம்பகத்தைப்பாடுவித்தனர். நந்தியின் அந்தப்புரத்துச் சுவரில் துளையொன்று செய்து அப்புலவனை விட்டு அக் கலம்பகப் பாட்டை நந்தி கேட்கப் பாடச்செய்தனர். அவனும் அவ்வாறே, கேட்போன் மனம் கரைந்து உருகுமாறு இனிமையாகப் பாடிவிட்டு ஒடினான். அப்பாட்டிசையில் ஈடுபட்ட நந்திவன்மன் அது கலம்பகப் பாட்டு என்று அறிந்து அதனை முழுதும் கேட்க வேட்கை கொண்டான். ஒருநாள் இரவில், நந்திவன்மன் தன்நகரத்துத் தெருவொன்றில் நங்கையொருத்தி தான் கேட்ட பாட்டையே பாடுவது கேட்டு மறுநாள் அவளை வருவித்துப் பாடச்சொன்னான். அவள், அஃதொரு நூறுபாட்டமைந்த கலம்பகம் அதனைக் கேட்பதாயின் சுடுகாடுவரையில் நூறு பந்தரிடவேண்டும் பந்தருக்கு ஒன்றாகப் பாட்டுக்களைப் பாட வேண்டும்; இறுதிப்பாட்டைப் பாடும்போது, பாட்டுடைத் தலைவனாகிய நீ சுடுகாட்டில் அடுக்கப்பட்டிருக்கும் சிதைமேலிருந்து கேட்டல் வேண்டும்' என்று தெரிவித்தாள்.


  1. 1. தொண். சத. 31.

    பொள்ளா நுழைவழிப் போய்த்
    தலை நீட்டும் புலவன் முன்னாள்,
    கள்ளாறு செஞ் சொற் கலம்பகமே
    கொண்டு காயம் விட்ட
    தெள்ளாறை நந்தியெனும்
    தொண்டைமான் கலி தீர்ப்பதற்கு
    வள்வார் முரசம் அதிர்த்தாண்டதும்
    தொண்டை மண்டலமே."