பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சைவ இலக்கிய வரலாறு

லாயின.- இந்த முறையும் முதற் பரமேஸ்வரன் காலமுதல் நடைபெறுவ தாயிற்று என்பர். வடமொழிக் கல்வெட்டுக்களின் இடையே தமிழ் எழுத்துக்கள், விரவாமல் இருப்பதும், தமிழ்க் கல்வெட்டுக்களில் வடவெழுத்துக்சள் விரவியிருப்பதும் காண்பார், பல்லவர் காலத்தே தமிழ் வழக்கு இலக்கண வரம்பின் வலியிழந்து ஒழிந்த திறத்தை நன்கு அறிவர். அன்று தோன்றிய வலியழிவு, பின்னர்த் தோன்றிய மணிப்பிரவாளமென்னும் நடையைப் பயந்தது. பின்னும் அதுவே, வடமொழியும் மேனாட்டுமொழியும் பிறவும் கலந்து இன்றைய எழுத்தாளரிடையே நிலவும் சவலை நடையைப் பயந்தது என்னலாம்.

சங்க காலத்தில் வேந்தர்களாலும் செல்வர்களாலும் பெரிதும் பேணப் பெற்று வந்த தமிழ், இடையே வந்த களப்பிரர், சளுக்கர், இரட்டர், பல்லவர் முதலியோரால் பேணற்பாடு. இழந்துபோகவே, அவர்வழி நின்ற தமிழ்ச் செல்வரும் பிறரும். தம்முடைய உரிமைத் தமிழை வளம்படச் செய்யும் துறையில் கருத்தூன்றாராயினர். அரசியல் தமிழிலே நடைபெற்றதெனினும், எழுத்து முறையில் தமிழ் வலியிழந்து நிற்பதாயிற்று. சமயத் துறையில் வடமொழியிற் காணப்படும் வேதங்களும், ஆறங்கங்களும், சுருதி மிருதிகளும், புராண இதிகாசங்களும், வடமொழியிலே நிலவின. புறச் சமயத்தவராய் வந்த பௌத்த சமணச் சான்றோர்களும், செல்வாக்குடைய வடமொழியிலும் பிற மொழிகளிலுமே தம்முடைய அறிவுப் பணி புரிந்தனர். செல்வ நிலையங்களாகிய கோயில்களிலும் மடங்களிலும் தமிழ் இலக்கியங்கள் நிலவுதற்கு இடமில்லையாயிற்று. தமிழ் நாட்டில், தமிழ் மக்கட்கு, அரசியல் நீதி முறைகளையும், சமய நூல் வகைகளையும் இனிதெடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் அருகின; இயற்றமிழ் என்ற தமிழ்த்துறை பல்லவர் காலத்தே போதிய ஆதரவு குன்றியது. என்பது தெளியவுணர வேண்டியதொன்றாகும். இதுதான் சைவ இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த செந்தமிழ் நிலை; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் தோன்றிய காலத்துச் சைவ இலக்கிய நிலையுமாம்.