பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

சைவ இலக்கிய வரலாறு


கற்பிக்கும் துறையில் ஒளவையார் நல்ல பணி புரிந்திருக்கிறார், இளஞ்சிறார்களின் மனப்பண்பையும் மொழிவளத்தையும் எண்ணி அவற்றுக்கேற்ப, உயரிய அறிவு நூல், பொருள் நூல், ஒழுக்கநூல் முதலிய பலநூல்களிற் காணப்படும் நற்கருத்துக்களை அச்சிறார்களின் தூய உள்ளத்திற் பதியுமாறு கற்பிக்கும் வகையில் ஒளவையார் பெருமை யெய்தினார். சிறார்கட்கென ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களை எளிய தமிழில் தாமே செய்து கற்பித்தார். இளஞ்சிறார் பலர் நல்லறிவும் நல்லொழுக்கமும் நன்மொழிப் பயிற்சியும் பெற்றுச் சிறந்தனர். அதனால் அவரது புகழ் தமிழகமெங்கும் பரவிற்று. இளஞ்சிறார் முதல் முதியவர் ஈறாகப் பலரும் ஒளவையார் நூல்களை நன்கு பயின்றனர்.

நாட் செல்லச் செல்ல ஒளவையார்க்கு முதுமையுண்டாயிற்று. அவர் நாடெங்கும் சுற்றி ஆங்காங்கு வாழும் செல்வர்களைக் காணவிரும்பினார். நாட்டில் வாழ்ந்த செல்வர் பலரும் ஒளவையாரை வரவேற்பதில் பேரன்பும் அவர் பாடும் பாட்டில் பெருமதிப்பும் கொண்டனர். ஒளவையாராற் பாடப்பெறுவதைச் செல்வர்கள், தாம் பெற்ற செல்வத்தின் பயனாகவே கருதினர். - .

அங்காளில் தொண்டை நாட்டில் போதியார் புலியூர் என்றோர் ஊர் இருந்தது. இப்போது அது தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனம் வட்டத்தில் பாதிராப்புலியூர்[1] என்ற பெயருடன் மருவி வழங்குகிறது. அதனைத்தலைமை இடமாகக் கொண்டு மாநாகன் பந்தன் என்ற வணிக னொருவன் செல்வச் சிறப்போடு வாழ்ந்தான். அவன் காவிரிப்பூம் பட்டினத்து வணிகர் குடியில் பெரு வாணிகம் செய்து இப்பகுதியில் தங்கியிருந்தான். அப்பகுதியில் பல ஊர்கள் அவனுக்கு உரியவாய் இருந்தன. அவற்றுள் அவன் பெயராலேயே ஒரு சதுர்வேதி மங்கலமும் உண்டு. அ.து. இப்போது பந்த மங்கலம்’[2] என வழங்குகிறது.


  1. 1. List of Villages in the Madras Presidency. p. 53.
  2. 2. ௸ 53.