பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. நம்பியாண்டார் நம்பி

வரலாறு

சைவ சமய ஆசிரியர்களான திருஞான சம்பந்தர் முதலிய சான்றறோர்கள் பாடிய திருப்பதிகங்களைத் தொகுத்து இசைவகைக் கேற்பத் திருமுறைகளாக முதன் முதலாக வகுத்த ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி எனப்படும் பெரியோராவர்.

நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் மரபில் தோன்றியவர். அவருடைய தந்தை அவ்வூரிலுள்ள பொல்லாப் பிள்ளேயார் திருக்கோயிலிற் பணிசெய்யும் தொழில் பூண்டிருந்தார். நம்பிகள் மிக்க இளையராய்ப் பள்ளியில் கலைபயின்று கொண்டிருந்தார். இருக்கையில், ஒருநாள் அவருடைய தந்தை வெளியூர்க்குச் சென்றார் மறுநாள் பிள்ளையாருக்குத் திருப்பணி செய்ய வேண்டிய கடமை நம்பிகட்கு வந்தது. அவர் உரிய காலத்தில் திருக்கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை நீராட்டித் தான் கொண்டுசென்ற நிவேதனப்பொருளை அவர் திருமுன்வைத்து, "எம்பெருமான் அமுதுசெய்யவேண்டும்"[1] என்று வேண்டினர். பிள்ளையார் அதனே உண்ணவில்லை. அதுகண்டு, 'வேழ முகனே, என்பால் ஏதேனும் தவறுண்டோ? அடியேன் நிவேதித்த அமுதத்தை நீ உண்ணுததென்னையோ?”[2] என்று சொல்லி வருந்தினர். முடிவில் இது தன்பெற்றோர்க்குத் தெரியின் தன்னே அவர்கள் ஒறுப்பரென நம்பிகள் அஞ்சித் தன் தலையை ஒரு கல்லில் மோதிக்கொண்டார். அப்போது பிள்ளேயார் நம்பி, பொறு” என்று உரைத்தருளி அமுதத்தையும் உண்டருளினார்.

மனக்கவலே நீங்கி நம்பிகள், பிள்ளையாரை வணங்கி ”எந்தாய், இப்போது நாழிகையாய்விட்டது; இனி, யான்


  1. திருமுறை கண். புரா. 4.
  2. ௸ 4.