பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448

சைவ இலக்கிய வரலாறு

வோர் அந்தணர் எனத் தாந்தாம் வேண்டியவாறு பொருள் கூறிக் கொள்வாராயினர். இவ்வாறே எத்துணையோ தமிழ்ச்சொற்கள் உண்மைக்கு மாறான நிலையில் சிதைத்துப் பொருள் கூறப்பட்டுள்ளன.

சொற்களுக்கு வரலாறு காணும் ஆராய்ச்சி தலையெடுக்குமாயின் மேலே காட்டப்பட்டது போலும் உண்மைகள் பல வெளிப்படும். பொருள் நெறியில் தமிழர் வறுமை மிகுந்து பிறர் ஏவல்வழி நிற்கும் ஏழைகளாய் இருப்பதுதான் இன்ன பல ஆராய்ச்சிகள் நடைபெறாமைக்குக் காரணம் என்பதை ஈண்டுக் குறிக்கத்தான் வேண்டி இருக்கிறது. இந்தி மொழி பேசும் மக்களுக் கிருக்கும் மொழிப்பற்றில் நூற்றில் ஒரு கூறு தானும் தமிழர்க்கு அமையுமாயின் எத்துணையோ நலங்கள் தமிழ்த்துறையில் தோன்றிவிடும்; இன்னும் அது தோன்றவில்லே.

அரசர் வணிகர் என்ற பிரிவுகள் “சாதிப் பிரிவுகள்” அல்ல; அவரவர் மேற்கொண்ட தொழில்களுள் தலைமை பற்றியும் பன்மை பற்றியும் வந்தனவாகும். வணிகர் வாணிகமே பெரிதும் செய்தனர்; ஆயினும், போர்ப் பயிற்சியும் பெற்று அதனையும் வேண்டுமிடத்து ஆற்றிவந்தனர். வேந்தர் பொருட்டுப்போருடத்றிச் செஞ்சோற்றுக் கடன் செலுத்துவது வணிகர் தொழில்களுள் ஒன்றாகும் எனப் பட்டினத்தடிகள் உரைப்பது இதற்குத் தக்க சான்றாகும்.[1] அந்நெறியில், புலவர் நாராயணனார் பொருள் துறையிலேயன்றிப் போர்த்துறையிலும் நல்ல புகழ்பெற்று வேம்பையர்கோன் எனப்படும் மேன்மைஎய்தினர். பார்ப்பார்க்குத் தாமரையையும் பாண்டியர்க்கு வேம்பையும் அடையாளப் பூமாலையாகக் கூறுவது போல வணிகர்க்குக் குவளைப்பூ மாலையைக் கூறுவது தொன்று தொட்டுவரும் முறையாகும். அதனால், நம் நாராயணனார் தம்மை, “தேறு சொல்லாந் தமிழ்த் தென்வேம்பையர் அண்ணல் செங்குவளை நாறும் மல்லாகத்து நாராயணன்”[2] என்று குறிக்கின்றார். பாண்டிநாட்டு


  1. இந்நூல் பக்கம், 381.
  2. சிராமலைய, 90.