பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

39

வாலந்துறை முதலிய பதிகளை வணங்கிக் கொண்டு பட்டீச்சுரம் வந்தார்.

பட்டீச்சுரத்தில் ஞானசம்பந்தர் வெயிலால் வருந்த ஒருபூதம் முத்துப் பந்தரைப் பிடித்து இது பட்டீசர் திருவருள் என்றது. பிள்ளையார் சிவபெருமான் திருவருளை வியந்து வணங்கிப் பல பதியங்கள் பாடிப் பரவிவிட்டுத் திருவாவடுதுறை வந்து சேர்ந்தார். அங்கே, சிவபாத இருதயர் வந்து, தாம் வேள்வி செய்யக் கருதுவதாகவும் அதற்குப் பொருள் வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். ஞானசம்பந்தர் இறைவனைப் பாடிப் பரவினாராக, ஆயிரம் பொன் கொண்ட பொற்கிழியொன்று திருக்கோயில் திருமுன் வைக்கப்பெற்றது. அதனைப் பெற்றுக்கொண்டு சிவபாத விருதயர் சீகாழிக்குச் சென்றார். பிள்ளையார், பின்பு பல பதிகளையும் கண்டு வணங்கிக்கொண்டு திருத் தருமபுரம் போய்ச்சேர்ந்தார். அங்கே திருநீலகண்டப்பாணனாருடைய உறவினர் அவரது இசையைப் பாராட்டினர். ஞான சம்பந்தர் அப்போது யாழ் மூரிப் பதியத்தைப் பாடினார். அப்பாட்டிசை பாணனாரது யாழில் அடங்காதாயிற்று. பாணனார்க்குச் சிறிது வருத்தமுண்டாகவே, ஞானசம்பந்தப்பிள்ளையார் இறைவன் திருப்புகழ் கருவிக் கடங்காதெனத் தேற்றித் திருநள்ளாறு சென்று இறைவனைப் பரவி, அங்கே இருந்த திருநீலநக்க நாயனார் திருமனையில் தங்கினார்.

அந்நாளில், சிறுத்தொண்ட நாயனார் திருச்செங்காட்டங் குடியில் இருந்து வந்தார். அவர் ஞானசம்பந்தர் திருநள்ளாற்றிற்கு வந்திருப்பதறிந்து தமது திருச்செங்காட்டங்குடிக்கு வருமாறு வேண்டினார். ஞானசம்பந்தரும், நாகைக்காரோணம் கீழ்வேளூர் முதலிய பதிகட்குச் சென்று இறைவனைப் பாடிப் பரவியவாறே, திருச்செங்காட்டங்குடி வந்து சிறுத்தொண்டர்க்கு விருந்தினராயிருந்து, செங்காட்டங்குடிச் சிவபெருமானைத் தீவிய பாட்டுக்களாற் பாடிப் பரவினார். அப்பதியத்தில் சிறுத் தொண்டரது சிவப்பணியையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். திருமருகற்குப் பிள்ளையார் சென்றிருந்தபோது-