பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சைவ இலக்கிய வரலாறு


சென்று கூத்தாடும் பெருமானைத் திருவேட்களத்தில் தங்கி வழிபட்டார். பின்பு திருவெருக்கத்தம்புலியூர் முதலிய ஊர்களின் வழியாகத் திருவரத்துறைக்குச் சென்றார். அங்கே அவர்க்கு இறைவன் அருளால் முத்துச் சிவிகை வழங்கப்பட்டது. அது பெற்று இறைவன் பேரருளில் திளைத்தாடி யின்புற்ற பிள்ளையார், திருச்சேய்ஞலூர் முதலியவூர்களில் இறைவனை இன்னிசையால் வழிபட்டுக் கொண்டு சீகாழி வந்து சேர்ந்து, சில நாள் தங்கியிருப்பாராயினர். அக்காலை, அவர்க்கு உபநயனம் செய்யக் கருதி வந்த வேதியர்களுக்கு இறைவன் திருவைந்தெழுத்தை யுணர்த்தி, “வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என அறிவுறுத்தி நன்னெறிப்படுத்தியிருந்தார். அந்நாளில் திருநாவுக்கரசர் ஞானசம்பந்தர் பெருமையைக் கேள்வியுற்று அவரைக் காண்பதற்குச் சீகாழிக்கு வந்தார். இருவரும் சீகாழியிலுள்ள இறைவனைச் செந்தமிழ் பாடி வழிபட்டனர். திருநாவுக்கரசர். அங்கே சிலநாள் இருந்துவிட்டு வேறுபிற வூர்கட்குச் சென்றார்.

சிறிது காலத்துக்குப்பின், ஞானசம்பந்தருக்குத் தமிழகத்தில் ஆங்காங்குள்ள திருப்பதிகட்குச் சென்று சிவபெருமானைச் செந்தமிழால் வழிபட வேண்டுமென்ற வேட்கை யுண்டாயிற்று. முத்துச் சிவிகை யூர்ந்து காவிரியின் வடகரையிலுள் பதிகள் பலவும் வணங்கிக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் திருப்பதியைச் சென்று சேர்ந்தார். அங்கே கொல்லிமழவன் என்னும் வேந்தன் மகட்கு உண்டாகியிருந்த முயலகன் என்னும் நோய் நீங்குமாறு இறைவனைத் திருப்பதியம் பாடிப் பரவினார். பின்பு அங்கே யிருந்து திருச்செங்குன்றூரை நோக்கிச் செல்வாராயினர்.

திருச்செங்குன்றூரில் ஞானசம்பந்தர் தங்கியிருக்கையில், அவரோடு உடன் சென்றோருட் சிலர்க்குச் சுரநோய் உண்டாயிற்று. பிள்ளையார், இறைவனை வழிபட்டு அச்சுர நோய் நீங்கச்செய்தார். பின்பு, திருப்பாண்டிக்கொடுமுடி, திருவெஞ்சமாக்கூடல் முதலிய பதிகளின் வழியாகக் காவிரியின் தென்கரைவழியே திருப்பராய்த்துறை, {{hws|திரு|திருவாலந்துறை }]