பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii

டால் “குன்று முட்டிய குரீஇப் போலவும், குறிச்சி புக்க மான் போலவும்” இடர்ப்படுகின்றது.

இந்நிலையில், கிடைக்கும் துணைகளைக் கொண்டு கற்றோர் முன் தோன்றுதற்கு முயலும் இலக்கிய வரலாற்றுக்குச் சென்ற பல ஆண்டுகளில் மேனாட்டவரும் நம் நாட்டவருமாகப் பல அறிஞர்கள் இத்துறையில் இறங்கிப் பல நற்பணிகளைச் செய்துள்ளனர். அரசியலாரும் நாட்டில் ஆங்காங்கு நின்று சிறக்கும் கோயில்களிலும், பிற இடங்களிலும் காணப்படும் கல்வெட்டுக்களைப் படியெடுத்து வெளியிட்டுள்ளனர். மோஹஞ்சோ-தாரோ, ஹாரப்பா முதலிய இடங்களிற் போலப் புதைபொருள் ஆராய்ச்சியில் தமிழ்நாட்டு அரசியல் கருத்தூன்றாது ஒழியினும் ஆங்காங்கு மக்கள் நிலத்திற் கண்டெடுத்த புதைபொருள்களைப் பெற்றும், இவ்வகையில் கிடைத்த செப்பேடுகளைக் கொண்டும் அறிக்கைகள் பல வெளியிட்டுள்ளனர். நாடு உரிமை பெற்ற பின், இச் செயல்வகைகளின் அரசியல் அறிக்கைகள் ஆண்டுதோறும் வெளிவருவது நின்று போயிற்று; என்றாலும், முன்பு வெளியிட்டனவற்றுள் ஒரு சில இறந்து போயினும் பல குறிப்புக்கள் மிகவும் பழமையான நூல் நிலையங்களில் முயல்வார்க்குக் காட்சி நல்குகின்றன. அவற்றைத் துணையாகக் கொண்டு இந்தச் சைவ இலக்கிய வரலாறு தோன்றி வெளிவருகின்றது.

சைவ இலக்கியங்களுள் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஈறாகத் தோன்றியவற்றின் வரலாற்றினை எழுதுவதென முதற்கண் வரையறுத்துக் கொண்டு இவ்வரலாறு தொடங்குவதாயிற்று. இவ் வரையறைக்குள் அகப்பட்ட இலக்கிய ஆசிரியன்மார்களின் பெயர்நிரலை இந்நூல் 33-ஆம் பக்கத்தில் காணலாம். ஆயினும், கி. பி.7-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிப் பத்தாம் நூற்றாண்டு முடிய நின்ற காலத்தவருள் திருஞான சம்பந்தர் முதல் வேம்பையர்கோன் நாராயணன் ஈறாக உள்ள ஆசிரியர் வரலாறுகள் எழுதி முடித்ததும், யான் மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்து சேரவேண்டிய நிலைமை ஏற்பட்டதனால், இந்த அளவோடு இவ்விலக்கிய வரலாறு வெளிவர வேண்டுவதாயிற்று. இக்கால வெல்லைக்குள் நிற்கும் பெருமானடிகள் வரலாறு இன்னும் காணப்படவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல்நிலையம் போலும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணைசெய்யும் நூல்களும், பிற வெளியீடுகளும் மதுரையில் கிடைத்தல் அரிதாயினமையின், இவ்வரலாற்றினை மேலும் தொடர்ந்து எழுதுதற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.