பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ச ஆராய்ச்சிக்குஉரிய மூலங்கள்

ஆண்டவர்கள். அவர்கள் காலத்தில் தெற்கே சோழரும் பாண்டியரும், மேற்கே சேரரும் கங்கரும் கதம்பரும், வட மேற்கில் சாளுக்கியர் - இரட்டர் என்பவரும் ஆண்டுவந்தனர். சிறப்பாகப் பல்லவ நாட்டிலும் பொதுவாகத் தென் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் (பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் மிகச் சிலவே கிடைத்துள்ளன), கட்டப்பட்ட சிவன் கோயில்கள், அக் காலச் சைவ இலக்கியங்கள் என்பவை பல்லவர் காலச் சைவ சமயத்தை அறியப் பெருந்துணை புரிவன. வைணவ - சமண - பெளத்த சமய நூல்களும் அக்காலச் சைவ சமயத்தைப்பற்றி அறிய ஓரளவு துணைபுரிவன. அக் காலத்தில் தென்னாடு போந்த ஹிவான் சுவாங் போன்ற அயல்நாட்டு யாத்ரிகர் குறிப்புகளும் துணை புரியும். பல்லவர் காலத்திற்றான் சைவ சமயம் தமிழ்நாடு முழுவதும் நாயன்மார்களாற் பரப்பப்பட்டது. சமணமும் பெளத்தமும் அலைக்கழிக்கப்பட்டன.தமிழகத்தில் இருந்த ஏறத்தாழ 300 சிவன் கோயில்களிலும் பூசைகளும் விழாக்களும் சிறப்புற நடக்க ஏற்பாடாயின. இந்த அரிய விவரங்களைத் தேவாரத்தைக் கொண்டும், தேவாரம் முதலிய தக்க சான்றுகளைக் கொண்டு கி.பி. 12-ஆம் நூற்றாண்டிற் பாடப்பட்ட பெரியபுராணம் கொண்டும் நன்கறியலாம்.

சோழர்காலம்.

சோழர் காலம் (கி.பி. 900-1300) தென் இத்தியவரலாற்றின் பொற்காலம். சோழர்கள் வழி வழிச் சைவர்கள். அவர்கள் காலத்தில் உண்டான பெரிய சிவன் கோயில்கள், புதுப்பிக்கப் பெற்ற பாடல் பெற்ற கோயில்கள், அக்கோயில்களிற் காணப்படும் கல்வெட்டுக்கள், அக் காலத்தில் இருந்த பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் போன்ற சிவ பக்தர்கள் பாடிய சைவ நூல்கள் ஆகியவை அனைத்தும் அக் காலச் சைவ சமய வளர்ச்சியை நன்கு காட்டவல்லன. சோழப் பெருநாடு துங்கபத்திரை - கிருஷ்ணையாறுகள் வரையில் பரவியிருந்தமையால், சோழர் காலக் கல்வெட்டுக்கள் அவ்யாறுகள் வரையிலும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் அக்காலச் சைவ சமய வளர்ச்சியைக் காட்டப் பெருந்துணை புரிவனவாகும்.

சோழர்கள் சைவ சமயத்தினர் ஆதலின் அவர்கள் காலத்து நூல்கள் பல சைவ சமயத்தனவாக இருக்கின்றன. அரசர்களைப்பற்றிப் பாடப்பட்ட மூவருலாப் போன்ற நூல்களிலும் அவர்கள் சைவத்திற்குச் செய்த தொண்டுகள் விரிக்கப்பட்டுள்ளன. பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற்புராணமும் இக்காலத்ததே. அது சிவபெருமானுடைய திருவிளையாடல்களைக் கூறும் நூல். -