பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

3


சைவத் திருமுறைகளாகிய செந்தமிழிலக்கியங்களிலிருந்து சைவ சித்தாந்தச் சாத்திரமாகிய இலக்கண நூல்களை உருவாக்கிக் கொடுத்தவர்கள் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார், திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், திருவதிகை மனவாசகங்கடந்தார், உமாபதி சிவாசாரியார் ஆகிய திருவருட் சான்றோராவர். பன்னிரு திருமுறையாசிரியர்களில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் ஆகிய நால்வரையும் சைவ சமயகுரவர் நால்வர் எனச் சிறந்தெடுத்துப் போற்றுவது போலவே சைவசித்தாந்த நூல்களை இயற்றியருளிய சான்றோர்களுள் மெய்யுணர்வுபதேச பரம்பரையைத் தோற்றுவித்து வளர்த்த மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகிய நால்வரையும் சைவசமய சந்தானகுரவர் நால்வர் எனப் போற்றுவது சைவமரபாகும்.

மெய்கண்ட நூல்களாகிய சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் அருளிச் செய்த திருவருட் சான்றோர்களின் வரலாறுகளையும் அவர்களால் இயற்றப்பெற்ற திருவந்தியார் முதல் சங்கற்பநிராகரணம் முடியவுள்ள சைவ சமய மெய்ந்நூல்கள் பதினான்கின் பொருளமைப்பினையும் இவற்றுக்கு நிலைக்கள மாகவுள்ள பன்னிரு திருமுறைகளிற் காணப்படும் சைவசித்தாந்தக் கொள்கையினையும் இவை எல்லாவற்றுக்கும் காலத்தால் முற்பட்ட சிலப்பதிகாரம், சங்கவிலக்கியம், திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய பண்டைத் தமிழ் நூல்களில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள தத்துவ நுண் பொருள்களையும் ஒப்புநோக்கி யாராய்ந்து தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவிவரும் சைவசித்தாந்த மெய்ந்நெறிக் கொள்கையினை வரலாற்று நெறியில் ஆராய்ந்து விளக்கும் முறையில் மெய்கண்ட நூல்களின் வரலாறாகிய இந்நூல் எழுதப் பெறுகின்றது. சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கை யினைச் சிறப்பாகத் தமிழகத்திலும் பொதுவாகப் பாரத நாட்டிலும் நிலைபெற்று வழங்கும் வைதிகம் வைணவம் முதலிய ஏனைச் சமயதத் துவக் கொள்கைகளோடும் நாட்டு மக்களின் வாழ்வியலோடும் ஒப்புநோக்கியுணரும் ஒப்பிடும் இந்நூலில் உரியவிடங்களில் மேற்கொள்ளப்பெறும்.

இந்நூலில் பின்வரும் தலைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.