பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

221


எனவரும் தொடரில் விரித்துரைக்கப்பெற்றது. படைத்தற் கடவுளாகவும் திருமாலின் மைந்தனாகவும் நான்முகன் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டிருப்பினும், அத் தெய்வத்திற் கெனத் தனி வழிபாடு தமிழகத்தில் நிலவியதாகத் தெரிய வில்லை. புறநானூறு 56ஆம் பாடலில் மணிமிடற்றோனாகிய சிவனும், பனைக் கொடியோனாகிய பலதேவனும், கருடக் கொடியோனாகிய திருமாலும், செவ்வேளாகிய முருகப் பெருமானும்

“ஞாலங்காக்குங்கால முன்பிற்

றோலா நல்லிசைநால்வர்”

எனப் போற்றப் பெற்றுள்ளனர். ஒரு குழை ஒரு தேவனாகிய பலதேவன் பரிதியஞ் செல்வனாகிய ஞாயிறு, மீனேற்றுக் கொடியோனாகிய காமவேள், அவன் தம்பியாகிய சாமன், ஆனேற்றுக் கொடியோனாகிய சிவன் ஆகிய ஐந்து தெய்வங்களுடைய நிறத்தின் தன்மை போலப் பூங் கொத்துக்கள் பொருந்திய வெண்கடம்பும், அரும்புகள் அலர்ந்த செருந்தியும், Dமிறுகள் ஆரவாரிக்கும் காஞ்சியும், பூக்கள் நெருங்கிய ஞாழலும், பூக்கும் காலத்து எதிர் கொண்ட அரும்புகளை உடைய இலவமும் அழகுபெற்று விளங்க, இளவேனில் வந்த தோற்றம் பாலைக்கலி 25ஆம் பாடலில் உவமை வாயிலாக விரித்துரைக்கப்பெற்றது. இப்பாடலில் மீனேற்றுக்கொடியோன் நிறத்தை ஒத்துப் பூப்பது காஞ்சி எனவும், அவனுடைய தம்பி சாமன் நிறத்தை ஒத்துப் பூத்தது ஞாழல் எனவும் குறிக்கப் பெற்றமையால் உடன் பிறந்தாராகிய காமன், சாமன் என்ற இருவரும் மேனியின் நிறத்தால் வேறுபடுவர் என்பது புலப்படுத்தப் பெற்றது. காமவேள் தம்பியின் பெயர் சாமன் என்பது,

"கவர்கணைச் சாமனார் தம்முள்” (கலி:29: 34)

எனக் காமன் குறிக்கப் பெற்றிருத்தலால் புலனாகும். காமன், சாமன் என்னும் இவ்விருவர்க்கும் தந்தையாவான் திருமால்

என்பது

"இருவர் தாதை இலங்கு பூண்மால்”