பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

311


பாணர்களுடைய யாழோசை எழ, அதற்கெதிராக வண்டின் இன்னிசை எழலும், ஒருபக்கத்தே வேய்ங்குழலின் ஒலி எழ அதன் எதிர் தும்பி முரலுதலும், ஒருபக்கத்தே முழவின் முழக்கம் உண்டாக அதன் எதிர் அருவி ஒலித்தலும், ஒரு பக்கம், ஆடலில் வல்ல மகளிர் ஆட அவர்க்கெதிரே பூங்கொடிகள் வாடைக்காற்றால் அசைதலும், ஒரு புறத்தே பாடினி பாடும் சுரவரிசையை யுடைய மிடற்றுப் பாடலின் கண்ணே நாலு தாக்குடைய கிழமையும், இரண்டு தாக்குடைய நிறையும் ஒரு தாக்குடைய குறையும் தோன்ற அதற்கெதிராக மற்றொருபுறம் சீருக்கிசைய ஆடுகின்ற மயிலினது இடை விட்டெழும் குரல் தோன்றுதலும் இவ்வாறு கலைத்திறங்களால் மாறுமாறாகிய தன்மையை உற்றனபோல ஒன்றின் ஒன்று இகலும் தன்மையை ஏற்றுக் கொள்ளுதலைப் பகைவரை இல்லை யாக்கிய முருகப் பெருமான் எழுந்தருளிய திருப்பரங்குன்றம் உடையதாகும்.

பாடுதல் அமைந்து பலபுகழும் முற்றுப்பெற்ற கூடல் நகரத்திற்கும் பரங்குன்றத்திற்கும் இடையே நின்ற நிலம் மிக அணிமையதாயினும் மகளிரும் மைந்தரும் நெருங்கி விளையாடுதலால் அவ்வழியில் இயங்குவோர்க்கு மிகச் சேய்மையுடையதாகத் தோன்றாநின்றது. மகிழ்ச்சிமிக்க மகளிர் கூந்தலினின்றும், மைந்தர் குஞ்சியினின்றும் வீழ்ந்து அவிழ்ந்து கிடக்கும் மாலையால் தடுக்கப்பட்டு வழிச் செல்வார்க்கு இயங்கும் நெறி இல்லையாயிற்று. பழி நீங்கிய மெய்ப்பொருள் பனுவல்களாலும், வழிபாடாகிய வேள்வியி னாலும் புகழினால் திசையெங்கும் பரந்த பரங்குன்றின்கண் எழுந்தருளியிருந்து உலகத்தார் பல இடங்களிலும் செய்கின்ற பூசையின்கண் முருகன் ஆவியாகக் கொள்ளும் அகிற்புகை அவ்விடந்தோறும் மேலே வானத்துச் செல்லுதலால் கண்ணிமையாத வானோரும் அவ்விடத்து நின்று கண்ணிமைத்துச் செல்வர். தேயாத ஞாயிற்று மண்டிலமும் புகை மிகுதியால் காணும் இயல்பினையுடையதன்று. குளிர்ந்த மாலையையணிந்த வளைக்கை இளமகளிரும் அவர்தம் மென்தோளிற்றங்கி அன்பு ஒத்தாராகிய மாலையணிந்த மார்பையுடைய மைந்தரும் மகிழ்ச்சிமிக்கு ஒரு சேரச்சுனையின் கண் பாய்ந்தாடுதலால் சுனையின்