பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மேயபொருப்பன் என்றது, “மாதேவனாகிய சிவபெருமான் அருள் மரபில் வந்த பாண்டியன்” என்ற பொருளில் வழங்கப் பெற்றதெனவே கொள்ள வேண்டியுளது. “மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன்” எனவரும் இளங்கோவடிகள் வாய்மொழி,

"தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற்

றொன்முது கடவுட் பின்னர்மேய வரைதாழருவிப் பெருப்பிற்பொருந”

(மதுரைக் காஞ்சி 40-42)

என வரும் மாங்குடி மருதனார் வாய்மொழியினை அடியொற்றி அமைந்திருத்தலால் 'தொன்முது கடவுள்' என மாங்குடி மருதனாராலும் மறைமுது முதல்வன்’ என இளங்கோவடிகளாலும் குறிக்கப்பெற்றவர் சிவபெருமானே என்பதும் அம்முதல்வனது அருள்வழியமைந்தது பாண்டியர் மரபென்பதும் நன்கு துணியப்படும்.

நஞ்சுண்டுகண்டங்கறுத்தமை

உண்டவர்கட்குச் சாவாமையினையும் மூவாமை யினையும் தரும் அமிழ்தத்தைப் பெறுதல் வேண்டித் தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபொழுது உலகவுயிர்கள் நடுங்கும்படி தோன்றிய ஆலகால நஞ்சினைத் தேவர்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் சிவபெருமான் உட்கொண்டு புறம் போகாமல் கண்டத்தில் அடக்கிக்கொண்டு மன்னுயிர்களைக் காத்தருளினார். அதனால் காரியுண்டிக் கடவுள் என்பது அவர்க்குரிய திருப்பெயராயிற்று. காரி - கருமை நிறமுடைய நஞ்சு. நஞ்சுண்ட பெருமானாகிய அவரது மிடறு அகத்தே நஞ்சக்கறை பொருந்தியிருத்தலால் கறைமிடறு எனவும் மறுமிடறு எனவும் புறத்தே நீலமணி போலும் நிறத்தினைப் பெற்று ஒளிர்தலால் திருநீல கண்டம் எனவும் மணிமிடறு எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. நஞ்சுண்ட கண்டனாகிய சிவபெருமானைக் காரியுண்டிக் கடவுள், கறைமிடற் றண்ணல், நீலமணிமிடற்றொருவன், மணிமிடற்றண்னல்,