பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

35


சிவலிங்கத் திருவுருவம் ஒன்று மட்டுமே முதன்மையாக நிறுத்தப்படினும் அக்கருவறையை உள்ளடக்கிய விமானத்தின் வெளிப்புடைகளில் வலமிருந்து இடமாக ஆலமர்செல்வன் திருமால் நான்முகன் கொற்றவை முதலிய வேறுபல தெய்வப்படிமங்களும் இடம் பெற்றுள்ளன. கருவறையின் நடுவே அமைந்த சிவலிங்கம் அனற் கொழுந்தின் தோற்றமாகக் கொள்ளும் நிலையில் அமைந்துளது. 'திருவையாற கலாத செம்பொற் சோதி” எனவும், திகழொளியே சிவனே எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கனவாகும். அனற்பிழம்பின் செவ்வொளியைச் சிவனாகவும் அனலில் அடங்கித் தோன்றும் நீலவொளியை இறைவியாகவும் கருதி வழிபட்டனர். இம்முறையில் சிவலிங்கத் திருவுருவத்தின் பின்புறத்தில் அம்மையப்பர் திருவுருவம் இடம் பெறுவ தாயிற்று. சிவலிங்கத் திருவுருவம் அமைக்கப் பெற்றதற்கு நெடுங்காலம் பிற்பட்டு அமைக்கப்பெற்றதே அம்மையப்பர் திருவுருவம் என்பதும், இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொன்மையுடையது சிவலிங்கத் திருவுருவம் என்பதும் அதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டு அமைக்கப்பெற்றது அம்மையப்பர் திருவுருவம் என்பதும் முகிஞ்சதரோ, அரப்பா முதலிய பண்டை நகரங்களை அகழ்ந்து அவற்றின்கண் இருந்த தெய்வத் திருவுருவங்களை எடுத்து வைத்துக் காட்டும் மேனாட்டாசிரியர் ஆய்வுரையினாலும் பண்டைத் தமிழ் நூலாராய்ச்சியாலும் நன்கு தெளியப்படும்.

சீர்காழித் திருக்கோயிலின் திருமலைமேல் அமைக்கப் பெற்றுள்ள திருத்தோணிச் சிகரத்தில் எழுந்தருளியுள்ள அம்மையப்பர் திருவுருவமும் பறம்புமலையாகிய திருக்கொடுங்குன்றத்தில் அமைந்துள்ள மங்கைபாகர் திருவுருவமும் எல்லாம்வல்ல இறைவனை அம்மையப்பர் திருவுருவில் அமைத்து வழிபடப்பெற்றுவரும் தொன்மை வாய்ந்தனவாகும். திருச்செங்கோடு என்னும் மலைமேல் வழிபடப்பெறும் அர்த்தநாரீசுவரர் திருவுருவம், உமையொருபாகர் வழிபாட்டின் தொன்மையினைப் புலப்படுத்துவதாகும்.