பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


யெழுப்பிப் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தி வாழ்க்கையில் அச்சமகற்றி வெற்றி நல்கி வையத்து வாழ்வாங்கு வாழ்தற்கு உதவுமாறு போலவே, என்றும் இளையோனாகிய சேயோனும் மக்கட்குலத்தார் குற்றமற்ற கோட்பாடுகளால் தாம் தாம் மேற்கொண்ட தொழில்கள் வெற்றி பெற முடித்து வையத்து வாழ்வாங்கு வாழும் வண்ணம் அவர்தம் மனத்தகத்தே இளஞாயிறாகத் தோன்றி அவர்தம் அறியாமையிருளை நீக்கி அச்சந்தவிர்த்து அவர்கள் உள்ளத்தே எண்ணியவனைத்தையும் இனிதே முடித்தருள் கின்றான் எனச் செந்தமிழ்ப்பனுவல்கள் போற்றுகின்றன. ஆதலால் காலைக் கதிரவனது தோற்றம் முன்னியது முடித்தருளும் முருகப் பெருமானது தோற்றப் பொலிவுக்கு உவமையாயிற்று. பகலெல்லாம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உழைத்து இளைத்த மக்கட்குலத்தார் தம் உடல் இளைப்பும் உள்ளக் கவலையும் நீங்கி ஒய்வுபெறும் நிலையில் மாலைப் பொழுதில் ஞாயிற்றின் தோற்றம் அமைதி வழங்குமாறு போன்று, உலக வாழ்க்கையிற் பலப்பல பிறவிகளையெடுத்து அல்லலுற்ற மாந்தர் ‘எம்பெருமானே எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தோம் எங்களது பிறவிப் பிணிப்பகற்றிப் பிறவாநெறியினை அளித்தருள்வாயாக’ என ஐம்பொறிகளையடக்கிய செம்புலச் செல்வர்களாய் மனங்குவிந்து போற்றி ஒருமைநிலைபெற்று அமைதிபெறும் நிலையில் அமைந்தது சிவவழிபாடாகும். எனவே, காலை இளஞாயிற்றின் தோற்றம் என்றும் இளையோனாகிய சேயோன் திருமேனியையும், மாலை ஞாயிற்றின் முதிர்ந்த செவ்வித்தாவிய அந்தி வானத் தோற்றம் முது முதல்வனாகிய சிவபெருமானது செம்மேனியையும் குறிப்பனவாக இலக்கியங்களிற் குறிக்கப்பெறுதலின் காலையிளங்கதிரவனை என்றும் இளையோனாகிய முருகன் எனவும் மாலை முதிர் கதிரவனை முருகனுக்குத் தந்தையாகிய சிவபெருமான் எனவும் தமிழ் முன்னோர் கருதிப் போற்றினர் எனத் தெரிகிறது. காலை ஞாயிறும் மாலை ஞாயிறும் கால வேறுபாட்டால் இரு நிலையினதாகக் காணப்படினும் பொருளளவில் இரண்டும் ஒன்றேயாதல் போன்று சேயோனும் சிவனும் இருதெய்வங்களாக வைத்து வனங்கப்பட்டாலும் இருவரும் ஒருவரே யென்பது