பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

529


கற்கோயிலை அமைத்த செங்குட்டுவனாகிய தம் தமையன் கருத்தினைப் பின்பற்றி அவ்வம்மையார்க்குச் சொற்கோயி லமைத்து வழிபட்டவர் இளங்கோவடிகள் என்பதும் நன்கு விளங்கும்.

அடிகள் தாம் சொல்லக் கருதிய பொருளைக் கற்போர் மனத்தில் நன்கு பதியச் செய்தல் வேண்டிக் கூறிய தெய்வத்தின் ஆவேச மொழிகளும் தெய்வத் தோற்றங்களும் பண்டைப்பிறப்பின் நிகழ்ச்சிகளும் அற்புதங்கள் சிலவும் இளங்கோவடிகள் காலத்தும் மக்களிடையே நிலை பெற்றிருந்த தெய்வ ஆவேசத்தின் நம்பிக்கையைப் புலப்படுத்துவனவாகும்.

தீக்கடவுள் பார்ப்பனக் கோலத்துடன் கண்ணகி முன் தோன்றினான் எனவும், பார்ப்பனப்பூதம், அரசபூதம், வணிகப்பூதம், வேளாண்பூதம் ஆகிய நால்வகை வருணப் பூதங்களும் மதுரை நகரத்தே இருந்தன எனவும், வணிகரை மன்னர் பின்னோர் எனவும் சிலப்பதிகாரம் குறிப்பிடுதலால், அக்காலத்து வேதநெறியைப் பின்பற்றிய நால்வகைச் சாதி வேறுபாடு இத்தமிழகத்தே புகுந்து நிலைபெறத் தொடங்கினமை நன்கு புலனாம். மேற்குறித்த நால்வகைப் பூதங்களைப் பற்றிக் கூறிய வருனனைப் பகுதிகள் சிலப்பதிகார ஏடுகள் எல்லாவற்றிலும் கானப்படவில்லை. கவுந்தியடிகள் மாதரியை நோக்கித் தானத்தின் பயனைப் கூறுமிடத்தும் மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகியின் முன்தோன்றிக் கோவலன் கொலையுண்டிறந்தமைக்குக் காரணமாகிய ஊழ்வினையை எடுத்துரைக்குமிடத்தும் மறுபிறப்பின் உண்மையினை இளங்கோவடிகள் வற்புறுத்துகின்றார்.

மதுரை நகரின் காவற்றெய்வமாகிய மதுராபதியைக் கொற்றவையின் வடிவுடையவளாக இளங்கோவடிகள் புனைந்துரைக்கின்றார். இதனால் ஒவ்வோர் ஊருக்கும் காவல் தெய்வமாகக் கொற்றவையின் உருவில் ஊர்காவல் தெய்வத்தைத் தமிழ் மக்கள் போற்றி வழிபட்டு வரும் வழக்கம் நன்கு புலனாகின்றது. இக்காலத்தும் சிற்றுார்கள்தோறும்

சை. இ. சா. வ. 34