பக்கம்:சொன்னார்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


இது என்ன வாழ்க்கை! ஜெயில் வாழ்க்கை போல் இருக்கிறது. மிருகக்காட்சி சாலையிலுள்ள குரங்கைப் போன்ற நிலையில் நான் இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பார்க்கும் பார்வையை எண்ணும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. நான் எளிமையாக வாழ விரும்புகிறேன். எல்லோருடனும் தமாஷாகச் சிரித்துப் பேச வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால் அது முடிவதில்லை. புகழ் என்னைத் தேடி வந்திருக்கிறது. இதனால் எளிமையாகவும், எண்ணம் போலவும் வாழ முடியாது போல் இருக்கிறது.

—புருஸ்லீ (உலக கராத்தே மன்னன்)

எனக்கு நிலங்கள் உண்டு. எனினும் சிறு போழ்தில் வெயிலில் வேலை செய்து பழக்கமின்மையால் விவசாயம் செய்து ஜீவிக்க முடியவில்லை. என் மனைவி மக்களும் அவ்வாறே இருக்கின்றார்கள், என் செய்வது!

—வ. உ. சி. (3-3-1923)(காரைக் குடியில்)

என் வாழ்நாளில் நான் எழுதியது எல்லாம் தமிழில் தான். வியாசர் விருந்தும், கண்ணன் காட்டிய வழியும், சக்கரவர்த்தி திருமகனும், உபநிஷதப் பலகணியும், பல வருடங்களுக்கு முன்பே கதைகளும் தமிழில்தான் எழுதினேன். எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக எழுத வராது. விஞ்ஞான சொற்கள் அடங்கிய புத்தகமும் தமிழில்தான் எழுதினேன். தமிழிலேயே மூழ்கி வளர்ந்தவனை-என்னைப் பார்த்து தமிழுக்கு விரோதி எதிரி என்பது மோசடி-முழுப்பொய்-கலியுகப்புளுகு.

—ராஜாஜி (4-7-1965)

ஒருவருக்கு 24 வயதில்தான் நல்ல வாழ்க்கை தொடங்குகிறது. என்னுடைய வாழ்க்கையிலும் 24 வயதில்தான் நல்லநேரம் வந்தது.

—நடிகர் திலகம் சிவாஜிகணேசன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/31&oldid=1013138" இலிருந்து மீள்விக்கப்பட்டது