பக்கம்:சொன்னார்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85


இந்தியா உலகத்துக்கெல்லாம் வழி காட்டியாய் இருக்க வேண்டும் என்று திரு. சுபாஷ் சந்திரபோஸ் கூறியதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் பற்பல நாடுகளைப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரிதான் பேசிக் கொள்கிறார்கள், உலகம் பூராவும் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பும் பொருட்டுக் கடவுள் தங்களை அனுப்பியிருக்கிறார் என்று ஆங்கிலேயர் எண்ணிக் கொள்கிறார்கள். பிரான்சு, ரஷ்யா ஆகிய நாடுகளும் உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தாங்களே வழி காட்டியாய் இருக்கவேண்டுமென்று கூறிக் கொள்கின்றன. எந்த தேசமும் எந்த ஜாதியாரும் தாங்களே கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாது.

—நேரு (20.5-1928)

(பம்பாயில்)


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம் என்று சொன்னார்கள்; அவர் நல்ல சமயத்தில் செத்தார் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதே போல எல்லோரும் அந்தந்த நேரத்தில் போய்விடவேண்டும். இருந்துகொண்டு மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது.

—எம். ஆர். ராதா (31.8-1961)


கவசமிடப்பட்ட சாதனங்களில் அமர்ந்து மனிதன் வான வெளியின் தனிமையினுள் பறந்து செல்லும் ஒருநாள் விரைவிலேயே வரும். அப்போது அவன் உலகைச் சுற்றி வந்து செய்திகளை அனுப்புவான். ரப்பரால் ஆன உடையணிந்து முகமூடி தரித்து அவன் இவ்வாறு வானவெளியினுள் ஊடுருவிச் செல்லும்போது அது மனித சமுதாயத்தின் தலைவிதியையே மாற்றியமைத்து விடும்.

—எச். ஜி வெல்ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/87&oldid=1015929" இலிருந்து மீள்விக்கப்பட்டது