பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளி மணி

1946ஆம் ஆண்டு வெள்ளி மணி என்ற பத்திரிகையைத் துவக்கினேன். நான் பத்திரிக்கை துவக்கிய அதே தினத்தில்தான் குமுதம் பத்திரிக்கையும் துவக்கப்பட்டது. குமுதம் மாதம் இருமுறையாக முதலில் வெளிவந்தது.

பிறகு மும்முறையாக வெளிவந்தது, அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து வாரப்பத்திரிக்கை ஆக்கினார்கள். நான் எடுத்த எடுப்பிலேயே வெள்ளிமணியை வாரப் பத்திரிக்கையாக்கினேன். சாவி அவர்கள் அதன் ஆசிரியராக இருந்து வந்தார். பத்திரிகை நல்ல பரப்பரப்பாக நடந்து வந்தது.

ஆனந்த விகடன், கல்கி, முதலிய பத்திரிக்கைகள் வெளியிடும் தீபாவளி மலரைப் போல் வெள்ளி மணியிலும் ஒரு தீபாவளி மலர் அதிகச் செலவு செய்து நல்ல முறையில் வெளியிட்டோம்.

ஆனந்த விகடன், கல்கி தீபாவளி மலர்கள் விற்பனை ஆனதுபோல் வெள்ளி மணி தீபாவளி மலர் விற்பனை ஆகவில்லை. ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சொந்த அச்சகம் இல்லாமல் பத்திரிக்கை நடத்தியது பெருந்தவறு என்று தெரிந்தது.

ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களுக்குச் சொந்தமான கம்மர்ஷியல் பிரிண்டிங் அண்டு பப்ளிஷிங் ஹவுஸ் என்ற அச்சகத்தில்தான் வெள்ளி மணி அச்சாகிக் கொண்டிருந்தது.