பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சொன்னால் நம்பமாட்டீர்கள்


போய் நானும் சேர்ந்துகொண்டேன். டி.கே.எஸ்.சகோதரர்கள் என்னிடம் மிக அன்பாக நடந்துகொண்டு நான் தலைமறைவாக இருப்பதற்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்தார்கள்.

அதற்கும் ஒரு நாள் ஆபத்து வந்தது. நாடகம் பார்க்க வந்ததுபோல் சில போலீஸ் அதிகாரிகள் வந்து நான் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இதை அறிந்த திரு.டி.கே.சண்முகம் அவர்கள் சாமர்த்தியமாக என்னை போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்புவித்து அவர்களுடைய காரிலேயே என்னைச் சென்னையில் கொண்டுவிடும்படி செய்தார்.

சென்னையில் தலைமறைவாக இருந்த திரு சா.கணேசன் அவர்களைச்சந்தித்தேன். அவர் சென்னையில் இருப்பது ஆபத்து என்று கூறி என்னை காசிக்குப் போய் தலைமறைவாக இருக்கும்படி ஏற்பாடு செய்தார். காசிக்கு என்னை இரயிலில் ஏற்றி விடுவதற்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமன் அவர்கள், திரு ஏ. கே. செட்டியார் அவர்கள். திரு. கோயங்கா முதலியவர்கள் வந்திருந்தார்கள்.

சென்னையிலிருந்து நானும் எனது நண்பரும் காசிக்கு ரயிலில் சென்றபோது இட்டார்சி என்ற ஊரில் ஒருநாள் மாலையில் இறங்கி மறுநாள் காலையில் ரயில் ஏற வேண்டியிருந்தது.

இட்டார்சி என்பது ஒரு ரயில்வே ஜங்ஷன். யுத்த காலமாக இருந்ததால் ராணுவவீரர்கள் ஏராளமாகத் தென்பட்டனர். இரவு எங்கு தங்குவது என்று தெரியவில்லை. எந்தப் போலீஸ்காரரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. சரி முதலில் ரயில்வே உணவு விடுதியில் சாப்பிடுவோம் என்று சாப்பிடப்போய் உட்கார்ந்தோம்.