இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
47
[அமைச்சரும் படைத்தலைவரும் வேறோர் பக்கம் சென்றபடி மெல்லிய குரலில் பேசிக் கொள்கினறனர்—
மதிவாணன் சென்ற திக்கையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் குமாரி-தோழி செந்தாமரை அரசியைக் குறும்பாகப் பார்க்கிறாள். அதுகண்ட குமாரி நிலைமையை உணர்ந்து தன்னை சரிப்படுத்திக் கொள்கிறாள். இருவரும் அந்தப்புரம் நோக்கிச் செல்கின்றனர்]
குமாரியின் தனி அறை
[மதிவாணன் அலங்காரம் நிறைந்த தனி அறையிலே கவலையும் பீதியும் கொண்ட நிலையிலே இருக்கிறான்—உட்புறக் கதவொன்று திறக்கப்பட்டு குமாரி மெல்ல உள்ளே நுழைகிறாள். மதிவாணன் திடுக்கிட்டு எழுந்திருக்கிறான். அவனையுமறியாமல் மரியாதை உணர்ச்சி ஏற்படுகிறது—வணக்கம் செலுத்துகிறான்— அவன் நிலை கண்டு குமாரி கேலியாகச் சிரித்தபடி...]குமாரி: இதென்ன வேடிக்கை—கொலு மண்டபத்தில் காதலைப் பொழிகிறீர்—இங்கு தனி அறையில் தர்பார் பொம்மை போலாகிறீர்.
மதி: குமாரதேவியாரே;
குமாரி: இப்படி அழைத்திருக்கவேண்டும் அங்கு.
[குமாரி அவனருகே சென்று கரங்களைப் பிடித்துக்கொண்டு கனிவுடன்.]
குமாரி: இங்கு குமாரி அல்லவா வந்திருக்கிறார்—அரசி அல்ல—குமாரி, தன் மணாளனிடம்.
மதி: (உருக்கமாக) தங்கமே! தணலில் அல்லவா இருக்கிறாய்! இன்பமே, என்னை ஏன் சந்தித்தாய்? என் வாழ்வின் விளக்காகப் போவதாகக் கூறி என்னைப் பித்தனாக்கிவிட்டாயே?