உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

குமாரி: கண்ணாளா! என்ன கலக்கம்? நான் தான் அரசி என்று கூறாததால் கோபமா? என் நிலைமை அப்படி துரையே! நான் என்ன செய்வேன்?

மதி: நிலைமை! ஆமாம்! தங்கமே! நாட்டை ஆளும் மகாராணி நீ—ஏட்டைத் தூக்கும் ஏமாளி நான்—

குமாரி: (பெருமிதத்துடன்) மகாகவி—மண்டலாதிபதிகள் போற்றிப் புகழத்தக்க, மகாகவி

மதி: தங்கம்!

குமாரி: என்ன கண்ணாளா?

மதி: இன்னமும் ஏன் அந்த இன்னமுது கொடுத்துக் கொல்கிறாய். தங்கம்! எனக்கு விடை கொடு.

குமாரி: விடை கொடுப்பதா?

மதி: காதலே விஷமாகிவிடும் முன்பு எனக்கு விடை கொடு—பாவி ஏன் வந்தேன் இந்த விழாவுக்கு—தங்கம்—குமாரதேவி—என் அன்பே! அரசாளும் ஆரணங்கே!

குமாரி: இதென்ன குழப்பம் கண்ணாளா? அரசியாக இருப்பதா தவறு?

மதி: தவறு அல்ல—பெரு நெருப்பு நம்மைப் பிரித்துவிடும் பெரு நெருப்பல்லவா? தங்கத்தை நான் பெறமுடியும்—ஆனால் குமார தேவியாரை?

குமாரி: குமாரதேவி நாட்டவருக்கு! மற்றவருக்கு—தங்களுக்கு நான் என்றும் தங்கம்தானே!

மதி: பாடிப்பிழைப்பவன் நான்—நாட்டுக்கரசி நீ—

குமாரி: அந்தக் குற்றத்தை மன்னித்துவிடு குணாளா! நான் அரசி; ஆயினுமென்ன? ஒரு பெண்ணல்லவா?

மதி: வேந்தன் வெற்றிவேலன், என்னைச் சூதுக்காரன்—துரோகி—என்று தூற்றுவார். உன் நாட்டுத் தலைவர்களோ, ஊர் பேர் அறியாதவர் எப்படியோ அரசியின் மனதை மயக்கிவிட்டான் என்று ஏசுவார்கள் தங்கம்.

குமாரி: என் திருமணத்திட்டத்துக்குத் தடைபோட யாருக்கும் அதிகாரம் கிடையாது.