பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி கொடிகளும், அழகிய குலைகளையுடைய பாக்கு மரங்களும் ஒன்றுக்கொன்று மீறிக்கொண்டு செழித்து வளர்ந்துள்ளன; வண்டுகள் பலவிதமான இன்னோசைகள் எழுப்ப, அவற்றிற்கேற்ப மயில்கள் நடனம் ஆடுகின்றன (3). திருத்தலத்தைச் சுற்றியுள்ள கழனிகளில் செந்நெல்களும், தாமரைப் பூக்களும், மீன் வகைகளும், செங்கழுநீர் மலர்களும் சேர்ந்துகொண்டு கழனிகள் உள்ள இடமெங்கும் திகழ்கின்றன. வெளியில் நோக்கினால் வயல்களின் வளம் சொல்லுக்கு எட்டாதது; உள்ளே நோக்கினால் வைதிகர்களின் செழிப்பு சொல்லுந்தரமன்று. (5). இளங்கமுக மரங்களும், குலைகள் நிறைந்த தென்னை மரங்களும், வெற்றிலைக் கொடிகளும், செந்நெற் பயிர்களும், கரும்புகளும் எம்மருங்கும் செழித்தோங்கி வளர்ந்துள்ளன (7). தாமரை மலர்களினின்றும் செங்கழுநீர் மலர்களினின்றும் தேன் வெள்ளமிட்டுப் பாய்கின்றது, வயலிலுள்ள உழவர்கள் இப்பெரு வெள்ளத்தினால் பயிர்கள் அழிந்திடும் என்றஞ்சி மடைகளை அடைக்கின்றார்களாம். பெரியவாச்சான் பிள்ளையும் “அங்கே உடைந்ததுகிடாய்; இங்கே உடைந்தது கிடாய்; ஸஹ்யப் பெருக்கு கிடாய் என்று கூப்பிடுகின்ற ஆரவாரமாய்க் கிடக்குமாயிற்று” என்றருளிச் செய்துள்ள அழகையும் கண்டு மகிழ்க (8). கயல் 'வாளை சேல் என்னும் மீன் வகைகள் செந்நெற் பயிர்களிடையே அழகிய பொய்கைகள் போல் ஒவ்வொரு வீதியிலும் நிறைந்து காணப்பெறுகின்றன (9). இந்தத் திருத்தலத்திற்கருகிலுள்ள கடலில் கப்பல்கள் நிறைந்துள்ளன (10). குற்றமற்ற வைதிகர்கள் நிறைந்திருக்கப் பெற்றது. நாங்கூர். "நாங்கூர் நாலாயிரம்” என்ற வாக்குப்படி அமைந்துள்ளது. இதனால் வேத ஒலிகளும் இசையொலிகளும் எங்கும் கேட்கப் பெறுகின்றன (2). நாங்கூரின் மாடமாளிகைகளின் உச்சியில் பாதுகாப்புக் குறுப்பாக நாட்டப் பெற்றுள்ள சூலங்கள் மேக மண்டலத்தளவும் ஓங்கியிருப்பதனால் அவை மேகங்களின் வயிறுகளைக் குத்திப் பிளக்க அவற்றினின்றும் முத்துகள் சிதறி விழுந்து மாளிகைகளிலெங்கும் மலிந்து கிடக்கின்றனவாம் (4). வேதவேதாங்கங்களைக் கற்றுத் துறைபோகிய வித்தக மறையோர் பொறுமை முதலிய நற்குணங்களைக் கொண்டவராய், வாரி வழங்கும் வள்ளண்மையுடையோராய்த் திகழ்கின்றனர் (6). இங்ங்னம் நாங்கூரின் வளம் பேசப்பெறுகின்றது பாசுரங்களில்.