பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர் வைகுந்தநாதன் 9 | அடுத்து, இங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானின் பெருமை பேசப்பெறுகின்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் தீமனத்தையுடைய இரணியனின் மார்பைப் பிளந்த நரசிம்மன், தடங்கடலைக் கடைந்து தேவர்கட்கு அமுதளித்த காளை, முகில்வண்ணன் (1.2). உலகமெல்லாம் பிரளயப் பெருங்கடலில் மூழ்கி அழிந்து போகாமல் அவை யாவற்றையும் தன் திருவயிற்றில் அடக்கிக் காத்தருளியவன்; உருத்திரனுக்குப் பிச்சையிட்டு அவன் சாபத்தைத் தீர்த்தருளியவன் (3). கலையிலங்கு அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியைக் காதோடு முக்குடன் அரிந்து அவளைக் கதறியழச் செய்த கார்நிற வண்ணன் (4). மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்காக இலங்கை வேந்தனின் பத்துத் தலைகளையும் பனங்காய்கள் போல் சிதறி ஓடச்செய்து அவனது இருபது தோள்களும் சின்னபின்னமாம்படி செய்து இலங்கை நகரையும் பொடிபடச் செய்த சூரன் (5). அழகிய பெண் உருவங்கொண்டு நஞ்சு தீட்டிய முலையுடன் வந்த பூதனை பேய் வடிவத்துடன் மாயும்படியாக அவளது உயிரை உண்டவன், இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவன், சகடா சூரனைச் சாடியவன் (6). இளங்கன்று வடிவாக வந்த வத்ஸாசுரனைத் தூக்கி விளாமரத்தின் மீது ஆவேசித்திருந்த கபித்தாகரன்மேல் எறிந்து இருவரையும் ஒருசேர ஒழித்தவன், இடைச்சியர் வீடுகளில் உறிகளில் சேமித்து வைத்திருந்த தயிர் வெண்ணெய் நெய் பால் முதலியவற்றைத் தன் திருவுள்ளம் குளிரும்படித் திருவமுது செய்தவன் (7). தீட்சணியமான திருவாழியால் நரகன் உயிர் தொலைத்த நாயகன், பெரிய பிராட்டியாருக்கும் சிவபிரானுக்கும் பகுதியாகக் கொடுத்த திருமேனியையுடையவன் (8). வானவர்களும் மாமுனிவர்களும் ஒருங்குகூடி சிறந்த மலர்களைக் கொண்டு அருச்சிக்கப்பெற்ற எம்பெருமான் (9). சங்கம், தண்டு, சக்கரம் முதலிய திவ்வியாயுதங்களை ஏந்திய தாமரைக் கண் நெடிய பிரான் அமர்ந்த நிலையில் காட்சி தருபவன் (10). நம்முடன் வந்த அர்ச்சகர் நம்மைத் திருக்கோயிலுக்குள் இட்டுச் செல்லுகின்றார். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங்கொண்டு வீற்றிருக்கும் திருக்கோலத்துடன் சேவை சாதிக்கும் வைகுந்த நாதனை வணங்குகின்றோம். இவருக்குத் தாமரைக்கண் நெடியபிரான் என்ற மற்றொரு திருநாமமும் உண்டு. தாயாரின் திருநாமம், வைகுந்தவல்லி என்பது. இவரையும் வணங்கி இவருடைய திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். எம்பெருமானின் சந்நிதியில் திருமங்கையாழ்வாரின்