பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi துறையில் செய்து கொள்ள துணைவேந்தரை (திரு. எஸ். கோவிந்தராஜூலு நாயுடு) வேண்டினேன். அவர் சொன்னார் "அங்கெல்லாம் பாலை உண்டாக்கியுள்ளனர். சிறிது நீர் ஊற்றினால் ஒன்றும் கெட்டுவிடாது. ஆனால், இது புதிய பல்கலைக் கழகம். இங்குப் பாலே இல்லை. முதலில் நீர் ஊற்றினால் என்ன ஆகும்? நீங்களே சொல்லுங்கள்" என்பதாக. துணைவேந்தர் பேச்சில் சதுரர். யார் எதற்குச் சென்றாலும் அழகாகப் பேசி எதிர்மறை முடிவினையும் புன்முறுவலோடு ஏற்றுக் கொள்ளுமாறு செய்து விடுவார். திரும்புகிறவர்களும் மனநிறைவுடன் திரும்பிவிடுவர். நான் சொன்னேன் "ஐயா, ஒரே ஒரு வழி உண்டு. கும்பகோணம் வழி என்பது அதன் பெயர். அதனைக் கையாண்டு முயல வேண்டியதுதான்" என்பதாக "அப்படி என்றால்?" என்று வினவினார். "சென்னையில் இருந்த தங்கட்கு இது நன்கு தெரியும். ஆறு திங்களில் தெரிவிப்பேன்" என்றேன். அவரும் அதனை வற்புறுத்தாமல் அந்த அளவில் விட்டுவிட்டார் சிரித்துக்கொண்டே என் வயதிற்கும், புலமைக்கும் அடக்கமான பண்புக்கும் அவர் மதிப்புத் தருபவராதலால், சற்றுத் துணிவுடன் அவரிடம் பழகும் வாய்ப்பு எனக்கு உண்டு. கும்பகோணத்திலுள்ள Institute of Homeopaths என்ற நிறுவனத்தில் பதிவு செய்துகொண்டு அஞ்சல்வழிக் கல்வி பெற்று தேர்வு எழுதி வெற்றி பெற்று ஓமியோபதி டாக்டரானேன். ஒருநாள் துணைவேந்தரிடம் சென்று சான்றிதழை அவர் முன் வைத்து இதுதான் கும்பகோணம் வழி. டாக்டர் பட்டம் வாங்கிவிட்டேன். உங்கள் பட்டம் இனி எனக்குத் தேவையில்லை" என்றேன். வியப்பும் வேடிக்கையும் கண்ட அவர் "மிஸ்டர் ரெட்டியார், உங்கள் உண்மையான கவலையையும் ஆர்வத்தையும் உணர்ந்தேன். இப்பொழுதே விண்ணப்பியுங்கள்" என்றார். 1964 இல் வடமொழித் துறையில் பதிவு செய்துகொண்டேன். ரீடராக இருந்த டாக்டர் வி. வரதாச்சாரியர் வழிகாட்டியாக அமைந்தார். ஐந்து ஆண்டுகள் ஆய்ந்து 1969 இல் பட்டமும் பெற்றேன். பணியாற்றிய தலத்திற்கும், வழிகாட்டியாக அமைந்தவருக்கும், என் மன நிறைவுக்கும் பொருத்தமான 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வாரின் தத்துவம்' என்ற தலைப்பை ஆய்பொருளாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். இப்படிப் பல்கலைக் கழக விதிகளை வைத்துக்கொண்டே சடுகுடு விளையாடி 52 வது வயதில் டாக்டர் பட்டம் வந்தது கர்மபுத்திரன்