பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சோழர் சரித்திரம்


1. தமிழகத்தின் பழமை

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் றிருநாடும்”

என்றாற்போல அறிஞர்களாற் புகழப்பெற்ற நம் தமிழகத்திலிருந்து தொன்று தொட்டு அரசுபுரிந்து வந்தோர் சேர, பாண்டிய, சோழர் என்னும் மூவேந்தராவர். தமிழகம் என்பது ஒருகாலத்தே தெற்கில் கடல் கொள்ளப்பட்ட குமரி (லெமூரியா கண்டத்தின் தென்கோடியிலிருந்து விந்தமலை வரையில் தொடர்புற்றுக்கிடந்த பெருநிலப் பரப்பாகும் என்று இப்பொழுதைய ஆராய்ச்சிவல்லார் துணிகின்றனர். குமரி கண்டமானது மிக்க பழமை வாய்ந்ததென்றும், அவ்விடத்திற்றான் முதன் முதல் மக்கள் தோன்றியிருக்க வேண்டுமென்றும் நில நூல் வல்லாரும், வான நூல் வல்லாரும், தொல்லுயிர் நூல் வல்லாரும் ஆராய்ந்து கூறுகின்றனர். தென்னாடு கடல் கொண்ட செய்தி, பிறநாட்டு ஆராய்ச்சியாளராற் கூறப்படுவதேயன்றி, நம் பழைய தமிழ் நூல்களிலும் கூறப்பட்டிருக்கின்றது. கலித்தொகை, சிலப்பதிகாரம், இறையனாரகப்பொருளுரை, தொல்காப்பியவுரை,