பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

சோழர் சரித்திரம்

சிலப்பதிகாரவுரை என்பன கடல்கோளைத் தெரிவிக்கின்றன. சுருங்கச் சொல்லின் தமிழகம் என்பது பல்லூழி காலமாக நன்மக்களின் பிறப்புக்கும், வாழ்க்கைக்கும் நிலைக்களனாய் விளங்கிவருவதொரு நாடு என்று கூறுதல் அமையும். பாதகண்ட முழுவதுமே தமிழகம் என்பது ஒரு சாரார் கொள்கை. பிற்காலத்தில் (பிற்காலம் எனினும் இப்பொழுதைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வடக்கில் வேங்கடமும், தெற்கில் குமரியாறும், கிழக்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாகவுடைய நிலமே தமிழகம் எனப்படுவ தாயிற்று. இவ்வெல்லையிலிருந்து ஆட்சிபுரிந்தோரே மூவேந்தராவர்.

கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்பே தமிழ் மன்னர் ஆட்சியில் தமிழகமானது செல்வத்திலும், நாகரிகத்திலும், சிறந்திருந்ததென்பதற்கும், எகிப்து, கிரீசு முதலான தேயங்களோடு வாணிகம் நடத்தி வந்ததென்பதற்கும் கிறிஸ்தவர்களுடைய பழைய மத நூலும், மேல் நாட்டு யாத்திரைக்காரர்களின் குறிப்புகளும் முதலானவையே சான்றாகவுள்ளன. பாரத காலத்திலே சேர பாண்டிய சோழ நாடுகள் மிக உயர்ந்த நிலையில் இருந்தன. பாண்டு மைந்தனான அருச்சுனன் பாண்டி நாட்டாசன் மகளை மணஞ் செய்துகொண்டான். பாரதப் போரிலே மூவேந்தரும் பாண்டவர்க்குத் துணையாய் நின்று போர் புரிந்த செய்தியைப் பாரதத்திலிருந்தே அறியலாகும். உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன் பாண்டவர் சேனைக்குப் போர் முடியும் வரைப் பெருஞ்சோறு அளித்துக் காப்பாற்றி, சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என வழங்கப் பெற்றான் என்பதனை,