பக்கம்:சோழர் வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

சோழர் வரலாறு



உணரலாமன்றோ? நாடக மகள் அரசர்க்குரிய நடன வகைகள், பொது மக்கட்குரிய நடன வகைகள், பாடல், தோற்கருவி.துளைக்கருவி.நரம்புக் கருவிகளைக் கொண்டு பாடல், ஒவியம் தீட்டல், பூ வேலை செய்தல் முதலிய பல கலைகளில் பல்லாண்டுகள் பழகித் தேர்ச்சியுறல் வேண்டும் என்று மணிமேகலை கூறுகின்றது.[1] பலவகை யாழ் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆடல் ஆசிரியன், இசை ஆசிரியன் முதலிய ஆசிரியன் மார் குறிக்கப்பட்டுள்ளனர். அரங்கேற்று காதையிற் குறிக்கப்பட்ட பல செய்திகள் இன்று அறியுமாறில்லை எனின், அக்கால இசைச் சிறப்பையும் நடனச் சிறப்பையும் என்னெனக் கூறி வியப்பது!

இசைக்கருவிகள்: அக்காலத்து இருந்த இசைக் கருவிகளாவன : அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாள்முழவு, காலை முழவு என ஏழுவகையாற் பகுக்கப்படும். பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப் பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதும்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுனிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலிய தோற் கருவிகளும், வங்கியம், குழல் என்னும் துளைக் கருவிகளும்; பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நரம்புக் கருவிகளும் பிறவும் ஆகும்.

இசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையாலும் பிறக்கும் பண்விகற் பங்களும் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்றாகிய இசைகளும் தமிழ்ப் பாணர்களால் அறிந்து பாடப்பெற்று வந்தன.


  1. காதை 2, வரி 18-32.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/124&oldid=482467" இலிருந்து மீள்விக்கப்பட்டது