பக்கம்:சோழர் வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

125



மாடமாளிகைகள் இருந்தன. செல்வாக்கு நிறைந்த யவனர் மாளிகைகள் இருந்தன; வாணிகத்தின் பொருட்டு வந்திருந்த பல மொழி மக்கள் தம்முள் வேற்றுமையின்றி நெருங்கி வாழ்ந்து வந்தனர். பலவகை மணப்பொருள்கள், பட்டாடை, பருத்தியாடை , கம்பள ஆடை முதலியன, பலவகைப் பூமாலைகள், இவற்றைச் செய்யும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர் உள்ளிட்ட பலவகை வணிகர்; பொற்கொல்லர், கன்னார், கருமான், தச்சன் முதலியோர், ஒவியம் திட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள் முதலிய பலதிறப்பட்டவரும் மருவூர்ப்பாக்கத்தில் உறைந்தனர். பட்டினப்பாக்கத்தில் அரசன் மாளிகை உடைய அகன்ற அரசர் தெருவும் தேரோடும் தெருவும் அங்காடித் தெருவும் இருந்தன. செல்வத்திற் சிறந்த வணிகர், நிலக்கிழவர், மறையவர், மருத்துவர், சோதிடர் முதலியோர் வாழ்ந்தனர். அரண்மனையைச் சுற்றிக் கரிவிரர், பரிவீரர், சேனைத் தலைவர் முதலியோர் உறையும் தெருக்கள் இருந்தன. புலவர், பாணர், இசைவாணர், மாலை தொடுப்பதில் வல்லார், முத்து வேலை செய்வோர், நாழிகை கூறுவோர், அரண்மனை அலுவலாளர் முதலிய பல திறத்தவரும் பட்டினப் பாக்கத்தில் உறைந்தனர்.

புகார் சிறந்த துறைமுகத்தைப் பெற்றிருந்தது. அரசரது பெருஞ் செல்வ நகரம், மாலுமிகள் நிறைந்த நகரம், கடல் சூழ்ந்த உலகமே வறுமை உறினும் தான் மட்டும் வறுமை உறாதது; வெளிநாட்டுப் பொருள்களும் உள்நாட்டுப் பொருள்களும் வண்டிகளில் போதலையும் வருதலையுங் கான, பல நாட்டுப் பண்டங்களையும் சாலையாகப் புகார் நகரம் காட்சி அளித்தது. அக்கோ நகரத்தின் செழுமை இமயம் அல்லது பொதியம் போன்ற உறுதிப்பாடு உடையதாகும்.[1] இந்நகர வருணனை பட்டினப்பாலையிற் காண்க. பெரிய கப்பல்கள் புகார்த்துறைமுகத்தை அடைந்து


  1. சிலப்பதிகாரம், காதை I, வரி 14-19; காதை II, வரி 1-10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/127&oldid=482483" இலிருந்து மீள்விக்கப்பட்டது