பக்கம்:சோழர் வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

165



கோப்பரகேசரி’ என்று தன்னை அழைத்துக் கொண்டான்[1]. மதுரையை இழந்த இராசசிம்மன், அப்பொழுது இலங்கையை ஆண்டுவந்த ஐந்தாம் கஸ்ஸ்பன் (கி.பி. 913-923) துணையை வேண்டினான். அவ்விலங்கை வேந்தன் பெரும்படை திரட்டிப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பினான். அப்படையின் துணை கொண்டு இராசசிம்மன் பராந்தகனை எதிர்த்தான். போர், வெள்ளுர் என்னும் இடத்திற் கடுமையாக நடந்தது. சோழன் பக்கம் பழுவேட்டரையர், கந்தன் அமுதனார் என்னும் சிற்றரசன் இருந்து போர் செய்தான். சோழனது ஒருபகுதி சேனைக்குத் தலைவனாக இருந்தவன் சென்னிப் பேரரையன் என்பவன்.[2] சோழ மன்னன் அப்பொழுது நடந்த கடும்போரில் அப்படையையும் வெற்றி கொண்டான்; பண்டு இலங்கைப் படைகளை வென்ற இராகவன் போலத்தான் இலங்கைப் படையை வென்றமையால், தன்னைச் சங்கிராம இராகவன் என்று அழைத்துக் கொண்டான். இறுதியாக ஈழப்படையின் தலைவனான சக்க சேனாபதி என்பவன் எஞ்சிய தன் சேனையைத் திரட்டி இறுதிப் போர் செய்ய முனைந்தான்; அப்பொழுது உண்டான கொடிய விட நோயால் இறந்தான்; படைவீரர் மாண்டனர். எஞ்சிய வீரர் ஈழநாடு திரும்பினர். வெள்ளுரில் நடந்த போரின் காலம் ஏறத்தாழக் கி.பி. 915 என்னலாம்[3]. இப்போரில் உண்டான படுதோல்வியால், இராசசிம்மன் இலங்கைக்கு ஓடிவிட்டான். பாண்டியநாடு முழுவதும் சோழன் ஆட்சிக்கு உட்பட்டது. களப்பிரரை முறியடித்துக் கி.பி. 575-இல் கடுங்கோனால் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு கி.பி. 915-இல் பராந்தக சோழனால் அழிவுற்றது.

ஈழநாட்டுப்போர்: ஈழநாட்டு மன்னன் இராசசிம்மனுக்குத் தனிமாளிகை அளித்து மரியாதை செய்தான். ஆயினும்


  1. 11 of 1931.
  2. S.I.I. Vol.3. No.99.
  3. Mahavamasa, Chap. 5.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/167&oldid=491138" இலிருந்து மீள்விக்கப்பட்டது