பக்கம்:சோழர் வரலாறு.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
210
சோழர் வரலாறு
 


தஞ்சைப் பெரிய கோவிலில் திருப்பதிகம் ஒத 48-பேர் அமர்த்தப்பட்டனர் என்பது கொண்டு,தேவாரப்பாடல்கள் நாடெங்கும் பரவச் சிவபாத சேகரனான இராசராசன் பெருமுயற்சி எடுத்துக் கொண்டான் என்பது நன்கு விளங்குகிறதன்றோ? தேவாரம் ஒத 48 பேரை நியமித்த இவன் காலத்திற்குள் திருமுறைகள் முறைப்படுத்தப்பட்டன என்பது ஐயமற விளங்குதல் காண்க. ‘இம்முறை வைப்பு இவன் காலத்தில் ஏற்பட்டிலது. பிற்காலத்தே தான் ஏற்பட்டதாதல் வேண்டும்’ எனக் கூறும் அறிஞரும் உளர். அவர் கூற்று மறுக்கற்பால தென்பதை அறிஞர் உலகநாத பிள்ளை அவர்கள் ஆய்வுரைகொண்டு தெளிக[1].

இராசராசன் சைவ உலகில் அழியாப் புகழினைப் பெற்றான். தேவாரத் திருமுறைகள் இவ்வுலகில் உள்ளளவும் இவன் பெயர் அழியாது நிற்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் அரசர் ஆற்றலை தகூழின அரசர்க்கும் பிறர்க்கும் உணர்த்திச் சமயப்பற்றோடு சிறந்த அரசியல் அறிவும் பெற்று வாழ்ந்த இப்பெருமான் பெயர் என்றும் வரலாற்றுலகிலும் சைவவுலகிலும் சிறப்பிடம் பெற்றுள்ள தென்பதை அறியாதார் யாவர்!


  1. Vide “Rajarajan I” pp. 100-105. திருமுறை கண்ட புராணம் முதலியன சந்தான குரவராகிய உமாபதி சிவனார் செய்ததன்று. யாரோ ஒருவர் செய்து அப்பெரியார் பெயரை வைத்து விட்டனர் என்பது அவற்றை நன்கு வாசித்தார் உணர்ந்திருப்பர். ‘திருத்தொண்டர் புராண வரலாறு’ பாடியவர் பெரிய புராணத்தை நன்கு படியாதவர் என்பது ஐயமற விளங்குகிறது. ஆதலின் இத்தகையோர் பாடல்களைக் கொண்டு வரலாறு கூறல் பெருந்தவறாகும் உண்மை வரலாறாகிய பாலமிழ்தில் நஞ்சு கலப்பதொப்பாகும்.